நாட்டில் குடிநீர் பிரச்னை மிகப்பெரும் சவாலாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிப்பது அவசியம் என நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. தேர்தலுக்குப் பின் புதிய அரசு பதவியேற்புக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை வெற்றி பெறச் செய்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளனர். மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இந்த அரசு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடும்.
தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வரி செலுத்தும் முறை தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
விவசாயத் துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே, ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தற்போது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, சிறு தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது.
குடிநீர் பிரச்னை என்பது நாட்டு மக்கள் முன் தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக நாம் தண்ணீரை சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம். தண்ணீர் அவசியத்தை அறிந்தே, ஜல் சக்தி எனும் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது என குடியரசு தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மக்களவைக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன் வரும் ஜூலை 5-ந் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.