6 புதிய எம்.பி.க்கள் யார்..?- தமிழகத்தில் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்

Rajya sabha election for 6 vacant mp seats in TN to be held on 18th July, EC announced:

by Nagaraj, Jun 25, 2019, 20:23 PM IST

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜுலை 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தலா 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள நிலையில், புதிய எம்.பி.க்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், கே.ஆர்.அர்ஜூனன் மற்றும் திமுகவின் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரது பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் கனிமொழி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றதால் அவர் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கும் வரும் ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 8-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 9-ந் தேதி
வேட்புமனுக்கள் பரிசீலனையும், வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூலை 11-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூலை18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.மக்களவைத் தேர்தலில் கூட்டணி உடன்பாடு செய்த போது திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு எம்.பி. சீட் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் ஒரு இடத்தில் வைகோ போட்டியிடுவார் என்று உறுதியாகத் தெரிகிறது. ஆனால் ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு இடத்தை அதிமுக ஒதுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுக தரப்பில் எஞ்சியுள்ள 2 இடங்களில் ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதிதாக ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படப் போவது யார்? யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

You'r reading 6 புதிய எம்.பி.க்கள் யார்..?- தமிழகத்தில் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை