ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகளில் யாருக்கு சீட் தரப் போகிறார்கள் என்று பல பெயர்களை கிளப்பி விடுவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரத்தினவேல், மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், அ.தி.மு.க. ஆதரவில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இவர்களில் கனிமொழி, தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் வென்றுள்ளதால், அவர் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இந்த 6 ராஜ்யசபா இடங்களுக்கும் ஜூலை 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையின் மொத்த பலம் 234. இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னுரிமை அடிப்படையில் வாக்குகளை அளிப்பார்கள். எனவே, ஒரே சமயத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டியிருந்தால், முதல் வாக்குகளில் குறைந்தபட்சம் 34 பெற்றால் வெற்றி உறுதி. தற்போது அ.தி.மு.க.வில் 123 சட்டமன்ற உறுப்பினர்களும், தி.மு.க. மற்றும் காங்கிரசில் 108 உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தலா 3 இடங்களை போட்டியின்றி பிரித்து கொள்ளும்.
அ.தி.மு.க.வில் நாடாளுமன்றத் தேர்தலின் போது, பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் சீட் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. மட்டுமே ஒரேயொரு இடத்தில் வென்றது. பா.ம.க. உள்பட மற்ற கட்சிகள் தோல்வியடைந்தன. இதையடுத்து, பா.ஜ.க கூட்டணியால்தான் அ.தி.மு.க. தோற்றது என்றும், பா.ம.க.வின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு விழவே இல்லை என்றும் அ.தி.மு.க.வுக்குள் பேச்சு அடிபடுகிறது.
மேலும், சட்டசபையில் ஒரு இடம் கூட இல்லாத பா.ம.க.வுக்கு எப்படி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்களித்து ராஜ்யசபா பதவியை விட்டுத் தருவது என்று சர்ச்சையும் ஓடுகிறது. பா.ம.க.வுக்கு தருவதற்குப் பதிலாக பொன்.ராதாகிருஷ்ணன் போல் பா.ஜ.க. முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு விட்டு ெகாடுத்தால், நமக்கு மத்திய அரசிடம் ஓங்கி பேசுவதற்கு ஒரு ஆள் கிடைக்கும் என்று அமைச்சர்கள் சிலரும் கூறுகிறார்களாம்.
இந்த சூழலில், பா.ம.க.வுக்கு ஓரிடம் தரப்படுமா என்பது தெரியவில்லை. மேலும், அ.தி.மு.க.வில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, ராஜன்செல்லப்பா என்று பெரிய படையே மோதுவதாக கூறப்படுகிறது. எனவே, எடப்பாடி அணிக்கு ஒன்று, ஓ.பி.எஸ். அணிக்கு ஒன்று, பா.ஜ.க.வுக்கு ஒன்று 3 இடங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
தி.மு.க.வில் ஒரு ராஜ்யசபா சீட், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தரப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை ஸ்டாலின் மாற்ற விரும்பவில்லை. அதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு பதவியை விட்டுத் தருமாறு, காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இது தொடர்பாக ஸ்டாலினிடம் போனில் பேசினார். அப்போது ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து விட்டு சொல்வதாக பதிலளித்திருந்தார்.
இதன்பின்பு, கராத்தே தியாகராஜன் ஒரு கூட்டத்தில் பேசும் போது, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.விடம் ஏமாந்து விடக் கூடாது’’ என்று ஏடாகூடமாக பேசினார். அதற்கு தி.மு.க. தரப்பில் கே.என்.நேரு, ‘‘எத்தனை நாளைக்கு காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது?’’ என்று பதிலடி கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக, தங்களால் இப்போதைக்கு ராஜ்யசபா சீட்டை விட்டுத் தர முடியாது என்று காங்கிரஸிடம் தி.மு.க. கூறி விட்டதாம். இதன் காரணமாகத்தான், கராத்தே மீது காங்கிரஸ் தலைமை கோபமாகி, அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறதாம்.
இந்நிலையில், திமுகவில் மீதி 2 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், வில்சன், முன்னாள் எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன், அன்பில் பொய்யாமொழி உள்பட பலரும் முட்டி மோதுகிறார்களாம். இதற்கிடையே, ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லியில் பல தலைவர்களிடம் தொடர்பு வைத்துள்ளதால், அவரை தனது பிரதிநிதியாக டெல்லிக்கு அனுப்ப ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. எனவே, சபரீசனுக்கு ராஜ்யசபா சீட் தரப்படலாம் என்று பேசப்படுகிறது. ஆனால், அதை ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மறுக்கின்றனர். தற்போதைக்கு சபரீசனே அந்தப் பதவியே கேட்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதியைக் கொண்டு வந்து, அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், அதற்குப் பிறகுதான் சபரீசன் நேரடியாக அரசியலுக்கு வருவார் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.