அடுத்தடுத்து அவதூறு வழக்கு மும்பை கோர்ட்டில் ராகுல் ஆஜர்

Not guilty, pleads Rahul Gandhi in Mumbai court in RSS defamation case

by எஸ். எம். கணபதி, Jul 4, 2019, 12:41 PM IST

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதே போல், பாட்னா, சூரத், அகமதாபாத் நீதிமன்றங்களிலும் அவர் அவதூறு வழக்குகளை சந்திக்கவிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, அவர் மீது பல ஊர்களில் அவதூறு வழக்குகளை பா.ஜ.க.வினர் தொடுத்தனர்.

பெங்களூருவில் பத்திரிகையாளர் லங்கேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து, ராகுல் காந்தி குறிப்பிட்ட போது, ‘‘ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வை கொள்கைகளை யாராவது விமர்சித்து பேசினால் அவர்கள் அடித்து உதைக்கப்படுவார்கள். கொலை கூட செய்யப்படுவார்கள்’’ என்று பேசினார். இதே போல், லங்கேஷ் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். மீது குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் பேசினார்.

இவர்கள் இருவர் மீதும் மும்பை தலைமை குற்றவியில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பா.ஜ.க. பிரமுகர் துருதிமான் ஜோஷி இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இ.பி.ேகா. 499, 500 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்காக, ராகுல்காந்தி இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் கார்கே, மிலிந்த் தியோரா ஆகியோர் வந்தனர். ராகுல்காந்திக்கு முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் ஜாமீன் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இதே போல் சீத்தாராம் யெச்சூரியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதே போல், ராகுல் மீது பல சர்ச்சை அவதூறு வழக்கு ஒன்று, தானே நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இவை தவிர, மோடியை திருடன் என்று விமர்சித்ததற்காக 2 நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகளை ராகுல்காந்தி சந்திக்க வேண்டியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த ஏப்ரல் 13ம் தேதியன்று ராகுல்காந்தி பிரச்சாரம் செய்த போது, ‘‘ஏன் எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது? நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று இன்னும் எத்தனை மோடிகள் வருவார்கள்?’’ என்று ராகுல் பேசியிருந்தார்.

இதற்காக, பீகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில், அம்மாநில துணை முதல்வரான சுஷில் மோடி(பா.ஜ.க.) ஒரு அவதூறு வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று ராகுல்காந்தி ஆஜராக வேண்டும்.
கோலாரின் ராகுல் பேசியதற்கு குஜராத் மாநிலம், சூரத்தில் ஒரு மோடி வழக்கு தொடுத்திருக்கிறார். புர்னேஷ் மோடி என்ற அவர் பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர், ராகுல் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு வரும் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதே போல், அகமதாபாத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கு வரும் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இவற்றிலும் ராகுல்காந்தி ஆஜராக வேண்டியுள்ளது. இந்த அவதூறு வழக்கு, அமித்ஷாவை ‘கொலை குற்றவாளி’ என்று கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று ஜபல்பூரில் ராகுல் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கு ஆகும். இதை கிருஷ்ணாவதன் பிரகம்பத் என்ற பா.ஜ.க. கவுன்சிலர் தாக்கல் செய்திருக்கிறார்.

'மொபைல் போனில் மும்முரம்'..! ஜனாதிபதி உரையை கண்டு கொள்ளாத ராகுல்காந்தி

You'r reading அடுத்தடுத்து அவதூறு வழக்கு மும்பை கோர்ட்டில் ராகுல் ஆஜர் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை