மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை..! மத்திய பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2019-2020-க்கான வரவு செலவுத் திட்டம், புதிய இந்தியாவுக்கான துவக்கம்; நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 இலட்சம் கோடி டாலராக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கான அறிகுறிகள் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படவில்லை. பொருளாதார ஆய்வு அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி ஐந்து ட்ரில்லியன் டாலர் என்று குறிக்கோள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இலக்கை அடைய, ஆண்டுக்கு 10 விழுக்காடு வளர்ச்சித் தேவை. தற்போது ஜனவர் - மார்ச் காலாண்டுக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடு மட்டுமே.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் 3,000 ஓய்வு ஊதியம், வருமான வரி உச்சவரம்பு ரூபாய் ஐந்து இலட்சம் போன்றவை தொடரும் என்பது வரவேற்கத்தக்கது.
இந்தியக் கைவினைக் கலைஞர்களின் படைப்புகளை, உலகச் சந்தையில் விற்க நடவடிக்கை, பனை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு, மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ரூபாய் 1.5 இலட்சம் வரை வரிவிலக்கு மற்றும் ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பு போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, விலைவாசியை அதிகரிக்கும். 0 பட்ஜெட் விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப திட்டங்கள் எதுவும் இல்லை. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5% அதிகரிப்பதால், தங்கத்தின் விலை கடுமையாக உயரும். சில்லரை வணிகத்தில் அயல்நாடுகளின் நேரடி முதலீட்டை 100% அதிகரித்துவிட்டு, சிறு, குறு வணிகர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம் எவ்விதத்திலும் பயன் அளிக்காது.
ஊடகம், விமானம், காப்பீட்டுத் துறைகளில் 100% அயல்நாடுகளின் நேரடி முதலீடு என்ற அறிவிப்பும், பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூபாய் 1.05 இலட்சம் கோடி நிதி திரட்டப்படும் என்ற திட்டமும், நாட்டின் தற்சார்பை வீழ்த்தி விடும்.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லை. நடைமுறையில் இருக்கும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு பிரிவுகளாக மாற்றி முறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பல கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைக்கு எதிரானதாகும்.
சமூக நலத்திட்டங்களை தனியார் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்துவதால், அரசின் பங்களிப்பு குறைவதுடன், முற்றாக மத்திய அரசு பொறுப்பில் இருந்து விலகும் நிலை உருவாக்கப்படுகின்றது.
வங்கிகளின் வாராக் கடன் 11 இலட்சம் கோடியை வசூலிக்கத் திட்டங்கள் இல்லை. ஆனால், பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரூபாய் 70,000 கோடி முதலீட்டு மூலதனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் பயன் ஏதும் இல்லை.
2030 ஆம் ஆண்டுக்குள் இரயில்வே கட்டுமானத்திற்கு ரூபாய் 50 இலட்சம் கோடி தேவை என்பதால், மக்கள்-தனியார் கூட்டு ஒத்துழைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதையே காரணமாக்கி, இரயில்வே துறையை தனியார்மயமாக்க பா.ஜ.க. அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்த வரவு செலவுத் திட்டம் அதை உறுதி செய்கின்றது.
தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள இரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாததும், பாதியில் நிற்கும் திட்டங்களைச் செயல்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததும் ஏமாற்றம் அளிக்கின்றது.
காவிரிப் பாசனப் பகுதிகளில் மத்திய அரசு மூர்க்கத்தனமாகச் செயல்படுத்தி வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் கடுமையாக போராடி வருகின்றார்கள். ஆனால், நிதிநிலை அறிக்கையில் இதுபோன்ற எரிவாயுத் திட்டங்கள் மூலம் இந்திய அரசுக்கு வருவாய் திரட்ட முடியும் என்று கூறுவது தமிழ்நாட்டுக்குப் பெரும் கேடு ஆகும்.
- தமிழ்