கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது... காங்., - மஜத எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமா?

Karnataka political crisis deepens, 13 MLAs resigned

by Nagaraj, Jul 6, 2019, 17:08 PM IST

கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எந்த நேரத்திலும் முடிவு கட்டப்படும் என்ற கட்டத்தை எட்டி விட்டது என்றே தெரிகிறது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு தான் நிறைவு பெற்றுள்ளது. பாஜக அரசு மீண்டும் அமைந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வலியப் போய் ஆதரித்தது. குமாரசாமியை முதல்வராக்கி நிபந்தனையற்ற ஆதரவு என்றும் அறிவித்து, அமைச்சரவையில் மட்டும் கூடுதல் இடங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆனால், குமாரசாமி ஆட்சி அமைந்தது முதலே நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பது போல, குழப்பம் மேல் குழப்பம் ஏற்பட்டு, இந்த ஒரு வருட காலத்தில் குமாரசாமி அரசு சந்திக்காத நெருக்கடியே இல்லை எனலாம். ஒரு பக்கம் மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் காங்கிரசில் பல எம்எல்ஏக்கள் அவ்வப்போது போர்க்கொடி தூக்க, மறு பக்கம் பாஜக தரப்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட கர்நாடக அரசியலில் புதுப்புது குழப்பங்கள் ஏற்பட்டு, ஆட்சி கவிழப் போகிறது என்ற பரபரப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலிலும் ஆளும் காங்-மஜத கூட்டணி படுதோல்வி அடைய, பாஜகவோ அமோக வெற்றி பெற்று விட்டது. இம்முறை பாஜக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட மாட்டோம் என்று அறிவித்திருந்தாலும், ரகசியமாக பெரும் மாஸ்டர் பிளான் போட்டுவிட்டது என்றே கூறலாம். காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களில் கணிசமானோரை ராஜினாமா செய்ய வைத்து, குமாரசாமி அரசை பெரும்பான்மை இல்லாமல் ஆக்குவதுதான் எடியூரப்பாவின் மாஸ்டர் பிளானாக இருந்தது. அந்த பிளான் ஒர்க் அவுட் ஆகி இன்று கர்நாடக அரசியலில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னாள் அமைச்சரும் 7-வதுமுறை எம்எல்ஏவாகவும் இருந்து வரும் ராமலிங்கா ரெட்டி தலைமையில், 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2 மஜத எம்எல்ஏக்களும் இன்று பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, சபாநாயகர் அலுவலகம் முன் அணிவகுத்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ்குமாரோ அலுவலகம் பக்கம் தலை காட்டாததால் பல மணி நேரம் காத்திருந்து அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள், சபாநாயகரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர். பின்னர் ஊர்வலமாகச் சென்று ஆளுநரிடம் முறையிடப் போவதாக தெரிவித்தனர்.

225 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 116 ஆகவும், பாஜக பலம் 105 ஆகவும் இருந்தது. கடந்த திங்களன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் ராஜினாமா செய்த நிலையில் இன்றும் 13 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் பலம் 101 ஆக குறையும் அபாயம் உள்ளது. எனவே எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் அபாய கட்டத்திற்கு குமாரசாமி அரசு சென்று விட்டது என்றே கூறலாம்.

கர்நாடகத்தில் இந்தக் கூத்து நடந்து வரும் வேளையில், முதல்வர் குமாரசாமியோ அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.தற்போதைய குழப்பங்களை அடுத்து அவசரமாக நாளை மறுநாள் பெங்களூரு திரும்புகிறார். குமாரசாமி வந்தவுடன் ஆட்சி தப்பிக்குமா?கவிழுமா? என்று தெரிந்துவிடும்.

You'r reading கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது... காங்., - மஜத எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமா? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை