கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி நிபந்தனையற்ற ஆதரவு என்று அறிவித்தது.
ஆனால், குமாரசாமி ஆட்சி அமைந்தது முதல் நித்ய கண்டம் பூரண ஆயுசாக குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் காங்கிரசில் பல எம்எல்ஏக்கள் அவ்வப்போது போர்க்கொடி தூக்க, மறுபக்கம் பாஜக தரப்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வர கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடித்து கொண்டே போகிறது.
இந்நிலையில், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பலரை ராஜினாமா செய்ய வைத்து, குமாரசாமி அரசை பெரும்பான்மை இல்லாமல் ஆக்குவதற்கு எடியூரப்பா மாஸ்டர் பிளான் போட்டார். அதனால், இன்று கர்நாடக அரசியலில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் 7-வது முறை எம்எல்ஏவாக இருக்கும் ராமலிங்கா ரெட்டி தலைமையில், 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மஜத எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர்.
225 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 118 ஆகவும், பாஜக பலம் 105 ஆகவும் இருந்தது. காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் பலம், சபாநாயகருடன் சேர்த்தே 105 ஆகியுள்ளது. அதே சமயம், சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து குமாரசாமி அமைச்சரவையில் இடம்பிடித்த ஹெச்.நாகேஷ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், தான் பா.ஜ.க. ஆட்சியமைத்தால் ஆதரவு தருவதாக கவர்னரிடம் கடிதம் அளித்துள்்ளார். இதனால், தற்போது காங்கிஸ்-ம.ஜ.த. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையாக 106 கிடைத்து விடும் நிலை ஏற்பட்டது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதால், கவர்னரின் ஆசியுடன் ஓரிரு நாளில் ம.ஜ.த-காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க. ஆட்சி அமைக்க முயற்சி நடக்கிறது.
இதற்கிடைேய, ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி, அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் மேலிடம் உறுதியளித்துள்ளது. இதற்காக தற்போது பதவியில் உள்ள அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதை முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, ம.ஜ.த. அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதை முதலமைச்சர் குமாரசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டனர். அதனால் மீண்டும் புதிய அமைச்சரவை அமைக்கப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், பத்திரிகையாளர்களிடம் குமாரசாமி கூறுகையில், ‘‘நான் கர்நாடக அரசியல் குறித்து எதுவும் இப்போது பேச மாட்டேன். இப்போது எனக்கு எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லை’’ என்றார்.
இதற்கிடையே, அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராமலிங்க ரெட்டியுடன் குமாரசாமி இன்று ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அதில் அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி தருவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிருப்தியாளர்கள் சிலருக்கு அமைச்சர் பதவி தரப்படுவதால், அவர்கள் ராஜினாமாவை வாபஸ் பெற்று மீண்டும் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவு தருவார்கள் என்றும் காங்கிரசார் தெரிவித்தனர்.
தற்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவதாக அறிவித்து கடைசியாக ராஜினாமா செய்த சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷும் அங்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், நாளை(ஜூலை 9) பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ராமலிங்க ரெட்டியின் மகளும் எம்.எல்.ஏ.வுமான சவுமியா ரெட்டி கலந்து கொண்டு, தந்தையின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதில் யார், யாருக்கு அமைச்சர் பதவி தருவது, எந்ெதந்த துறைகள் தருவது என்று முடிவெடுக்கப்பட்டவுடன், மீண்டும் குமாரசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி குமாரசாமி மீண்டும் பொறுப்பேற்கும் ேபாது, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிடலாம். அதனால், எம்.எல்.ஏ.க்களை மொத்தமாக தங்க வைப்பதற்காக குடகு மாவட்டத்தில் உள்ள பட்டிங்டன் ரிசார்ட்டில் 35 அறைகளை முன்பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். எனவே, குமாரசாமி ஆட்சி நீடிக்குமா, கவிழுமா என்பது ஒரே நாளில் தெரியாது. இன்னும் சில நாட்களுக்கு இந்த நாடகங்கள் நடக்கலாம்.