ராஜ்யசபா தேர்தலில் வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்படுமா என்ற சந்தேகத்தை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால், அவர் எம்.பி.யாவது உறுதியானது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 இடங்கள் கிடைக்கும்.
திமுக சார்பில் தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும், மற்றொரு இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோரும், ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, அதில் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தி.மு.க.வின் சார்பில் 3வது வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, திடீரென வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்களிடையே குழப்பம் ஏற்படுத்த தி.மு.க. சார்பில் 3வது வேட்பாளரை நிறுத்தி ஆழம் பார்க்கிறார்களோ என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், ஒரு வேளை அவரது மனு நிராகரிக்கப்படலாம் என சந்தேகம் எழுந்தது. அப்படி மனு நிராகரிக்கப்பட்டால், மாற்று வேட்பாளராகவே என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதை வைகோவே தெரிவித்தார்.
‘‘ஒருவர் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதிநீக்கம் செய்யப்படுவார். ஓராண்டு மட்டுமே தண்டனை அறிவிக்கப்பட்டதால், எனது வேட்பு மனுவை ஏற்று கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று நம்புகிறேன். இருந்தாலும் நானே மாற்று வேட்பாளரை நிறுத்துமாறு ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டேன்.
அதன்படி, என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்துள்ளார். எனது மனுவை ஏற்று கொண்டு விட்டால் என்.ஆர். இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்று விடுவார்’’என்று வைகோ கூறியிருந்தார்.
இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே, ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.