அடுத்த தேர்தலுக்கு தயாராகும் மம்தா ஜூலை 21ல் மெகா பேரணி

Prashant Kishor Aboard, Trinamool To Launch Bengal Battle With Mega Rally

by எஸ். எம். கணபதி, Jul 18, 2019, 11:12 AM IST

மேற்கு வங்கத்தில் 2021ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதே பணியைத் தொடங்குகிறார் மம்தா பானர்ஜி. இந்த தேர்தலில் அவரது திரிணாமுல் கட்சி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக ஆட்சியில் நீடிக்கும் அவரது கட்சியினர் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கரைந்து விட்ட நிலையில், எதிர்க்கட்சிக்கான வெற்றிடத்தை பா.ஜ.க. பிடித்திருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளையும் பிடித்து விட வேண்டுமென்று மம்தா தீவிரமாக பணியாற்றினார். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும், ஆளும் திரிணாமுல் கட்சியில் இருந்தும் பலரை இழுத்த பா.ஜ.க. மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து விட்டது. அதன் காரணமாக, நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்றது.

மேலும், தேர்தல் முடிந்த பின்பும் திரிணாமுல் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என்று பலரை பாஜக வளைத்து கொண்டே இருக்கிறது. ‘‘விரைவில் மம்தா ஆட்சியை கவிழ்த்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வருவோம். அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்’’ என்று பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் மொத்த இடங்கள் 294. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் அடிப்படையில் சட்டப்பேரவை தொகுதிகளை கணக்கிட்டால், திரிணாமுல் கட்சிக்கு 171 இடங்களும், பாஜகவுக்கு 116 இடங்களும் கிடைத்ததாக கருத வேண்டும். மெஜாரிட்டிக்கு 148 எம்.எல்.ஏ.க்கள் வேண்டும். எனவே, பாஜகவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற கூடுதலாக கொஞ்சம் வேலை பார்த்தாலே போதும் என்ற நிலை உள்ளது. அதனால்தான், இப்போதே அக்கட்சி தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.

அதே சமயம், அம்மாநிலத்தில் வரும் 2021ம் ஆண்டுதான் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வருகிறது. அது வரை ஆட்சியில் நீடிப்போம் என்று மம்தா நம்பி வருகிறார். அத்துடன், சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதே தயாராகத் தொடங்கி விட்டார். மக்களின் அதிருப்தியை சம்பாதித்த கவுன்சிலர்கள் உள்பட பலர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளார்.

மேலும், தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அவர் ஏற்கனவே 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி, அடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் ஆகியோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்தவர்.

தற்போது பிரசாந்த் கிஷோர், கொல்கத்தாவுக்கு அடிக்கடி வந்து திரிணாமுல் மூத்த தலைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கடைசியாக, கடந்்த 13ம்தேதி பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் தலைவர்களிடம் விவாதித்து விட்டு சென்றுள்ளார். மேலும், அவரது ஆலோசனைப்படி, வரும் 21ம் தேதி வீரவணக்க நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தி, தேர்தல் பிரச்சாரத்தை துவக்குவதற்கு மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

உயிர்தியாகம் செய்த கட்சியினருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திரிணாமுல் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 21ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் மம்தா கலந்துகொள்வார். இம்முறை அன்றே பிரச்சாரத்தை தொடங்க மம்தா முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி, திரிணாமுல் மூத்த தலைவர் சுப்ரதா பக்‌ஷி கூறுகையில், ‘‘கடந்த 26 ஆண்டுகளில் நடந்ததை விட இம்முறை பேரணியை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பிரசாந்த் கிஷோர் ஐடியா என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

ஆனால், கட்சியின் பலத்தைக் காட்ட மம்தா முடிவு செய்திருக்கிறார்’’ என்றார்.
ஏற்கனவே பாஜக களமிறங்கி, திரிணாமுல் அதிருப்தியாளர்களை இழுப்பது, பிரம்மாண்ட கூட்டங்களை நடத்துவது என்று தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது. இப்போது மம்தாவும் களமிறங்குவதால், மேற்கு வங்க அரசியலில் இப்போதே தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

மம்தா ஆட்சியை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி: 107 எம்எல்ஏக்கள் கட்சித் தாவ தயார்

You'r reading அடுத்த தேர்தலுக்கு தயாராகும் மம்தா ஜூலை 21ல் மெகா பேரணி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை