தேசத்துரோக வழக்கு வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு

Sedition case, Madras HC suspends one year sentence for vaiko

by Nagaraj, Jul 18, 2019, 21:23 PM IST

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினார். இதனால் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்தது. இதில் வைகோவுக்கு, ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வைகோ மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில்,தேசத் துரோக சட்டப்பிரிவு 124(ஏ)-ன் விளக்கத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். ஏற்றுக் கொள்ள முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். எனவே, தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என வைகோ தெரிவித்திருந்தார்.

வைகோவின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து இன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில், ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பேசுமாறு வைகோவுக்கு அறிவுரை வழங்கினார்.

You'r reading தேசத்துரோக வழக்கு வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை