டிரம்ப்பின் பொறுப்பற்ற பேச்சு: மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்பி

US Lawmaker Apologises For Donald Trumps Embarrassing Claim On Kashmir

by எஸ். எம். கணபதி, Jul 23, 2019, 12:58 PM IST

‘இந்தியா எப்போதுமே காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்றுக் கொண்டதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, டிரம்பின் பொறுப்பற்ற பேச்சுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அமெரிக்க எம்பி ஒருவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரமதர் இம்ரான்கான் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேற்று(ஜூலை22) சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமென்று டிரம்ப்பிடம் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த டிரம்ப், ‘‘கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய பிரதமர் மோடியும் இதே போல் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே, காஷ்மீர் விவகாரத்தில் என்னால் உதவ முடியும் என்றால், நான் மத்தியஸ்தராக செயல்படுவதற்கு விரும்புகிறேன்’’ என்று கூறினார்.

ஆனால், டிரம்ப்பின் இந்த பேட்டிக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த முடியும். இதில் அமெரிக்காவிடம் மோடி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. பாகிஸ்தானுடன் எந்தப் பிரச்னைக்கும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இருநாடுகளும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காண முடியும். இதில் வேறு யாரும் தலையிடுவதை இந்தியா ஏற்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபரின் பொறுப்பற்ற பேச்சுக்கு இந்திய தூதரிடம் மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராட் ஷெர்மான், ட்விட் போட்டுள்ளார். அதில் அவர், ‘‘அதிபர் டிரம்ப்பின் பேச்சு பொறுப்பற்றது. இந்திய பிரதமர் மோடி ஒரு போதும் அப்படி கேட்கவே மாட்டார். தெற்காசிய வெளியுறவுக் கொள்கைகள் குறித்த எவருக்குமே தெரியும், இந்தியா எப்போதுமே காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்றுக் கொண்டதில்லை என்பது. எனவே, டிரம்பின் பேச்சுக்காக இந்திய தூதர் ஹர்ஷ் ஷிரிங்லாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறி்ப்பிட்டுள்ளார்.

இம்ரான்கானின் அட்வைஸை கேட்காதது ஏன்? - பாக்.கேப்டனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

You'r reading டிரம்ப்பின் பொறுப்பற்ற பேச்சு: மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்பி Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை