மோடி, அமித்ஷா சொன்னால் 24 மணி நேரத்தில் ஆட்சி கவிழ்ப்பு கமலை மிரட்டும் பாஜக எம்.எல்.ஏ

Kamal Nath govt will be out in 24 hours, need one signal from BJP: MP leader Gopal Bhargava

by எஸ். எம். கணபதி, Jul 24, 2019, 18:16 PM IST

‘எங்கள் கட்சியின் நம்பர் 1, நம்பர் 2 மட்டும் ஓ.கே. சொல்லி விட்டால், 24 மணி நேரத்தில் உங்கள் ஆட்சியை கவிழ்த்து விடுவோம்’’ என்று மத்தியப் பிரதேச சட்டசபையில் முதல்வர் கமல்நாத்தைப் பார்த்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சவால் விட்டிருக்கிறார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரசில் இருந்து 13 எம்.எல்.ஏ.க்களும், ம.ஜ.த கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தஞ்சமடைந்தனர்.

அவர்களை பாஜக கட்சிதான் இயக்குகிறது என்றும், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று பாஜகவினர் துடிக்கிறார்கள் என்றும் காங்கிரஸ், மஜத கட்சிகள் குற்றம்சாட்டின. ஒரு வாரமாக அம்மாநிலத்தில் நடைபெற்ற காட்சிகள் அனைத்துமே ஜனநாயகத்தின் அசிங்கமாகவே பார்க்கப்பட்டது. கடைசியாக, குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டு விட்டது. அடுத்து ஆட்சியமைக்க பாஜக தலைவர் எடியூரப்பா தயாராகி வருகிறார்.

இதன் மூலம், ஜனநாயகவாதிகள் அனைவரின் மத்தியிலும் பிரதமர் மோடி, அமித்ஷா பெயர் கெட்டு போயிருக்கும் நிலையில், அடுத்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளார்கள். அங்கு தற்போது முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் 230. இதில் காங்கிரஸ் 114 இடங்களை வைத்திருக்கிறது. மெஜாரிட்டிக்கு 116 இருந்தாலே போதும். ஆனால், சுயேச்சைகள் 4, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாடி ஒரு உறுப்பினர் என்று 121 பேரின் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில், சட்டசபையில் இன்று(ஜூலை24) பாஜக உறுப்பினர் கோபால் பார்கவா பேசுகையில், ‘‘எங்கள் கட்சியின் நம்பர் 1, நம்பர்2 (மோடி, அமித்ஷா) ஆகியோர் ஓ.கே. சொல்லி விட்டால், 24 மணி நேரத்திற்குள் உங்கள் ஆட்சி போய் விடும். அவர்களின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். 7 மாதங்களாக நீங்கள் ஆட்சியில் நீடிப்பதே பெரிய விஷயம்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கமல்நாத், ‘‘உங்கள் நம்பர் 1, நம்பர் 2 ஆகியோர் புத்திசாலிகள். அதனால்தான், அவர்கள் உங்களுக்கு அந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. இப்போதும் சொல்கிறேன். நீங்கள் விரும்பும் நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள்’’ என்று பதிலளித்தார்.

சட்டசபைக்கு வெளியே பாஜக எம்.எல்.ஏ. கோபால் பார்கவா கூறுகையில், ‘‘ஆளும் கூட்டணியில் பல அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். நாங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்க்க முடியும். நாடு முழுவதும் மாற்று கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள்’’ என்றார்.

You'r reading மோடி, அமித்ஷா சொன்னால் 24 மணி நேரத்தில் ஆட்சி கவிழ்ப்பு கமலை மிரட்டும் பாஜக எம்.எல்.ஏ Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை