பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. அழவும் கூடாது என மைத்ரேயனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை போல் இருந்த மைத்ரேயனுக்கு 3 முறை ராஜ்யசபா எம்.பி.பதவி கொடுத்தார். டெல்லியில் பாஜக தலைவர்களுடன் இருந்த நெருக்கமே அவருக்கு இந்தப் பதவி கிடைக்க காரணம் என்றும் கூறலாம். மீண்டும் எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்த்த மைத்ரேயனுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு நோ சொல்லி விட்டது. இதனால் சோகத்தில் இருந்தால் மைத்ரேயன்.
இந்நிலையில்,கடந்த 3 நாட்களுக்கு முன் மைத்ரேயனின் எம்.பி.பதவிக் காலம் முடிவடைத்தது. ராஜ்யசபாவில் கடைசி உரை நிகழ்த்திய போது மைத்ரேயன் கண்ணீர் மல்க பேசினார். பின்னர் மறுநாள் சென்னை வந்த மைத்ரேயன், ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அங்கேயே செய்தியாளர்களை சந்தித்தவர், மீண்டும் எம்.பி.வாய்ப்பு வழங்காதது வருத்தமளிக்கிறது. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் மறுத்து விட்டனர். இந்த நேரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? என்றெல்லாம் தமது குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.மேலும், மைத்ரேயன் திமுகவுக்கு செல்லப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்சியில் பதவி கிடைக்காததற்காக அழக்கூடாது. கட்சியை விமர்சிப்பதும் அழகல்ல.
எனக்கும்கூட முன்பு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதற்காக நான் அழுதேனா?. பொறுப்பு கிடைக்கவில்லை என்றவுடன் கட்சியையும் கட்சியில் இருப்பவர்களையும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார்.