பாஜக எம்எல்ஏவால் பாலியல் கொடுமைக்கு ஆளான உன்னோவ் பெண் உயிர் ஊசல்

by Nagaraj, Aug 6, 2019, 20:54 PM IST

உ.பி.யில் பாஜக எம்எல்ஏவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உன்னோவ் பெண்ணை, காரில் சென்ற போது டிரக்கை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ல் உ.பி.மாநிலம் உன்னோவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரால் 17 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்தப் பெண் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை முறையாக விசாரிக்காமல் அலைக்கழித்ததால் அந்தப் பெண், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன் தீக்குளிக்க முயன்றதும், இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பான து. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செங்கார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி, பாஜக எம்எல்ஏவால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் சென்ற கார் ரேபரேலி அருகே விபத்தில் சிக்கியது. இதில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். வழக்கறிஞரும், பெண்ணும் படுகாயம் அடைந்தனர்.
இருவரும் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே கார் மீது டிரக் மோதிய சம்பவம் விபத்து அல்ல. பாஜக எம்எல்ஏவால் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து என குற்றச்சாட்டு எழுந்து, நாடு முழுவதும் மீண்டும் கண்டனக் குரல் எழுந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே, இந்தப் பிரச்னையில் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். உ.பி.சிறையில் உள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை டெல்லி திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

இதனால் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த அந்தப் பெண் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு பல்வேறு நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


More Politics News