ஒரே வருடத்தில் மதன்லால் குரானா, ஷீலா தீட்சீத், சுஷ்மா ஸ்வராஜ் என 3 முன்னாள் முதல்வர்களை டெல்லி மாநிலம் இழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மதன்லால் குரானா கடந்த 1993 முதல் 1996 வரை டெல்லி முதல்வராக பதவி வகித்தவர். இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மரணமடைந்தார்.
கடந்த ஜுலை மாதம் டெல்லியில் 3 முறை தொடர்ந்து முதல்வர் பதவி வகித்த ஷீலா தீட்சித் வயது மூப்பு காரணமாக காலமானார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித், டெல்லி முதல்வர் பொறுப்பில் இருந்த போது பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி டெல்லி மக்களின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே 15 ஆண்டு காலம் டெல்லி முதல்வர் பதவியில் நீடித்தார்.
இந்நிலையில் தற்போது சுஷ்மா ஸ்வராஜ் மரணமும் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 முறை மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ், வாஜ்பாய் மற்றும் மோடி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கிய இலாகா வகித்தவர். அதற்கு முன் 1998-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை சிறிது காலம் மட்டுமே பெல்லி முதல்வராகவும் சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் முன்னாள் முதல்வர்களாக இருந்த மதன்லால் குரானா, ஷீலா தீட்சித், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ஒரே வருடத்தில் மரணத்தை தழுவியுள்ளது டெல்லி வாசிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.