அயோத்தி வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை உச்ச நீதிமன்றம் விளக்கம்

Were in no hurry to finish Ayodhya hearing, says SC

by எஸ். எம். கணபதி, Aug 14, 2019, 13:45 PM IST

அயோத்தி ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை. இருதரப்பிலும் எத்தனை நாள் வேண்டுமானாலும் வாதாடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்தார். அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது. அதை பாபர் காலத்திலோ, அவுரங்கசீப் காலத்திலோ இடித்து விட்டார்கள் என்பதும், அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டு விட்டது என்பதும் இந்து அமைப்புகளின் வாதம். இதன்பின், பாபர் மசூதி இடிக்கப்பட்டு அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தியது எல்லாம் பழைய வரலாறு.

தற்போது, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. ஆனால், சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நில உரிமை வழக்கு நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், மத்தியஸ்தர் குழுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு நியமித்தது. ஆனால், அந்த மத்தியஸ்தர் குழு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் சமரசம் பேசி பார்த்து விட்டு, சுமுக முடிவை எட்ட முடியவில்லை என்று கூறி விட்டது. இதையடுத்து, அயோத்தி வழக்கின் விசாரணையை தினந்தோறும் நடத்தி விரைவாக முடிக்கப் போவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவித்தது.

கடந்த 2 நாள் முன்பாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு வழக்கை விசாரிக்கும் போது, முஸ்லிம் அமைப்பின் சார்பில் வாதாடும் சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறுகையில், ‘‘இந்த அயோத்தி வழக்கு வாரத்தின் 5 நாட்களுமாக தொடர்ச்சியாக விசாரணை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது. அப்படி 5 நாட்களும் விசாரணை நடத்தினால், அது மனிதத்தன்மையற்றது. எங்களால் தினந்தோறும் தொடர்ச்சியாக இந்த வழக்கில் வாதாட முடியாது. வழக்கை அவசரமாக விசாரித்து முடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி விசாரணை நடத்தினால், நான் வழக்கில் இருந்து விலகிக் கொள்வேன்’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ‘‘உங்கள் புகாரை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக விரைவில் உங்களுக்கு தகவல் அளிக்கிறோம்’’ என்றார். இதன்பின், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறுகையில், ‘‘இந்த வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை. இருதரப்பு வழக்கறிஞர்களும் தேவையான கால அவகாசத்தை எடுத்து கொண்டு வாதாடலாம்’’ என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், இன்று 6வது நாளாக வழக்கின் விசாரணை நடைபெற்றது.

அயோத்தி வழக்கை அவசரமாக விசாரிப்பதா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எதிர்ப்பு

You'r reading அயோத்தி வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை உச்ச நீதிமன்றம் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை