ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கனவை நனவாக்கியது போல், ஒரே நாடு, ஒரே தேர்தலும் நாட்டிற்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்ட பின்பு, ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதும் நமக்கு அவசியமானது. இப்போது இது குறித்த விவாதம் ஏற்பட்டிருப்பதில் நல்ல விஷயம்.
இந்த அரசு அமைத்து 70 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால், நாட்டின் அனைத்து மக்களுக்கும் புதிய பலம் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி, 3 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக ஆக்கியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் இலக்கை அடைந்தே தீருவோம்.
சர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களின் விற்பனை அதிகரிக்கச் செய்ய வேண்டும். எல்லா நாட்டிலும் இந்தியாவின் ஒரு பொருளாவது விற்பனையாக வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் போராடி வருகிறது. தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், தீவிரவாதத்திற்கு நிதி கொடுப்பவர்கள், அவர்களைத் தூண்டி விடுபவர்களை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தி வருகிறோம்.
உலக அளவில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. போர் முறைகளும் மாறி வருகின்றன. எனவே, ராணுவத்தைப் பலப்படுத்த செங்கோட்டையில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை கொண்டு வரப்படும். வீரர்கள் அனைவருக்குமான ஒரே தலைவர் நியமிக்கப்படுவார்.
நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து வசதிகள் மற்றும் ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது.
ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்கக் கூடாது.
இவ்வாறு மோடி பேசினார்.
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டது தற்காலிகம்தான்; பிரதமர் மோடி உறுதி