கர்நாடகா : 23 நாளாக நீடிக்கும் எடியூரப்பாவின் ஒன்மேன் ராஜ்ஜியம் அமைச்சரவை பட்டியல் எப்போது?

by Nagaraj, Aug 17, 2019, 13:42 PM IST

கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்று 23 நாட்களை கடந்து விட்டது. மழை, வெள்ளத்தால் அம்மாநிலமே தத்தளிக்கும் நிலையில், அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய முடியாமல் ஒன் மேன் ராஜ்ஜியம் நடத்தி வருவதை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனால் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எடியூரப்பா, அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்து விட்டே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜ. மேலிட உத்தரவுப்படி முதல்வர் எடியூரப்பாவும் ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரமுகர் சந்தோஷும் டில்லியில் நேற்று சந்தித்து அமைச்சர் பதவியை யார், யாருக்கு வழங்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடியால், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசுக்கு நெருக்கடி முற்றியது. இதனால் ஒரு மாத காலம் அம்மாநில அரசியலில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்களின் முடிவில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து ஜூலை 26-ந்தேதி எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 23 நாட்கள் நிறைவடையும் நிலையில், அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறார். இதற்குக் காரணமும் பாஜக எம்எல்ஏக்கள் பலரின் அமைச்சர் பதவி ஆசைதான். இதனால் 3 முறை டெல்லி சென்றும் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் எடியூரப்பா திணறி வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கர்நாடகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால், முதல்வர் எடியூரப்பா ஒன் மேன் ஆர்மியாக நிர்வாகம் செய்ய முடியாமல் திணறி வருகிறார். மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலைமையை சமாளிக்க அமைச்சர்களும் இல்லை. இதனால் நிவாரணப் பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக எதிர்க்கட்சிகளும் மக்களும் அதிருப்தி தெரிவித்து, விமர்சித்தும் வருகின்றனர்.

இதனால் அமைச்சரவை பட்டியலை இறுதி செய்து மேலிடத்தின் ஒப்புதல் பெறுவதற்காக முதல்வர் எடியூரப்பா, கடந்த 2 நாட்களாக டெல்லி முகாமிட்டுள்ளார். நேற்று பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை எடியூரப்பா நேற்று சந்தித்துள்ளார். அமைச்சரவை தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவும், கர்நாடக மாநில ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரும் கட்சி பொதுச் செயலாளருமான சந்தோஷும் தனித் தனியே பட்டியலை டெல்லி மேலிடத்திடம் கொடுத்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த அமித் ஷாவோ இருவரும் கலந்தாலோசித்து ஒரு மித்த முடிவுக்கு வரும்படி கூறி விட்டாராம். இதனால் எடியூரப்பாவும் சந்தோஷும் டெல்லி கர்நாடக பவனில் நேற்று மாலை சந்தித்து இருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டியலை வைத்து ஒரு வழியாக ஒரே ஒரு பட்டியலை தயாரித்து விட்டனராம். ஆனால் யார் ? யாருக்கு? அமைச்சர் பதவி என்பதை வெளியிடாமல் இருவரும் ரகசியம் காத்து வரும் நிலையில் இன்று மாலைக்குள் அமித் ஷாவின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து தவம் கிடக்கும் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு முதற்கட்டமாக15 பேர் மட்டுமே அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படும் நிலையில், பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்களில் பலர் போர்க்கொடி தூக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியல் மீண்டும் ஒரு பரபரப்புக்கு தயாராகி வருகிறது என்றே கூறலாம்.

கர்நாடக புதிய சபாநாயகரானார் விஷ்வேஸ்வர் ஹெக்டே ; போட்டியின்றி தேர்வானார்


Leave a reply