உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசில், முதல் முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், 5 அமைச்கர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
உ.பி.யில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 29 மாதங்களாகி விட்டது. அமைச்சரவையில் 60 பேர் வரை இடம் பெறலாம் என்ற நிலையில் 38 பேர் மட்டுமே இருந்தனர். இதனால் பாஜக எம்எல்ஏக்கள் மேலும் பலருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆட்சி அமைந்தது முதலே நிலவி வந்தது. ஆனால் 29 மாதங்கள் கடந்த பின் முதல் முறையாக இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. 23 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களில் 6 பேர் கேபினட் அமைச்சர்களாகியுள்ளனர்.
இன்று அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்ட நிலையில், பாஜக மேலிட உத்தரவுப்படி மூத்த அமைச்சர்கள் 5 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் போக்குவரத்து அமைச்சராக இருந்த மாநில பாஜக தலைவர் சுவதந்திர தேவ் சிங் மற்றும் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த ராஜேஷ் அகர்வால் ஆகியோர் முக்கியமானவர்கள். மற்ற 3 அமைச்சர்களும் சரியாக செயல்படவில்லை என்பதால் ராஜினாமா செய்ய பாஜக மேலிடம் கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது.