ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம், நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க் கட்சித்தலைவர்கள் யாரும் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இரு முறை செல்ல முயன்றும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், காஷ்மீரில் வீட்டுச் சிறையில் உள்ள தமது நண்பரும், கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், மூத்த தலைவருமான முகமது தாரிகமியை நேரில் ஆஜர்படுத்தக்கோரி சீத்தாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்த போது, யெச்சூரியின் வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, காஷ்மீர் சென்று தனது நண்பரும், கட்சியின் மூத்த தலைவருமான முகமது தாரிகாமியை மட்டும் சந்திக்க யெச்சூரிக்கு தலைமை நீதிபதி நிபந்தனையுடன் அனுமதி வழங்கினார். காஷ்மீரில் வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ, வேறு யாரையும் சந்திப்பதோ கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் அது நீதிமன்ற உத்தரவை மீறியதாகும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதே போல் டெல்லியில் படிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் முகமது அலீம் என்பவருக்கும், காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக்கில் வசிக்கும் பெற்றோரைச் சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. காஷ்மீர் சென்று வந்தவுடன் உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதே போன்று காஷ்மீர் மாநிலத்தில் உள்ளவர்கள், தங்கள் உறவினர்களைச் சந்திக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.