யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை என்பதுதான் மிகப் பெரிய தண்டனை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
கடந்த 2014ம் ஆண்டில் மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க.வின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் ஏடாகூடமாக பேசி ஏதாவது சர்ச்சையி்ல் வாடிக்கையாகி விட்டது. அதே போல், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி, ரமேஷ் பொக்ரியால் ஆகியோரின் கல்விச் சான்றிதழ்கள் குறித்தும் சந்தேகக் கணைகள் எழுந்தன.
இப்போது, மத்திய அமைச்சர் ஜவடேகர் ஒரு விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் தொடர்பு அமைச்சரான அவர், கடந்த 28ம் தேதியன்று சமுதாய வானொலிகளுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் அம்பேத்கர் பவனில் நடைபெற்றது.
இதில், விருதுகளை வழங்கி ஜவடேகர் பேசும் போது, சமுதாய வானொலிகளின் சேவைகளையும், தகவல் தொடர்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார். அப்போது அவர், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை, ஒருவரிடமும் பேச முடியாத சூழல், எந்த வகையான தொடர்பு சாதனமும் இல்லாத நிலையை இப்போது நினைத்து பார்க்க முடியுமா? அப்படியிருந்தால் அதுதான் மிகப் பெரிய தண்டனை என்று குறிப்பிட்டார். அவர் பேச்சின் போது, அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட மோடி அரசின் பல்வேறு சாதனைகளையும் பாராட்டினார்.
ஆனால், யாருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலைதான் மிகப் பெரிய தண்டனை என்று அவர் பேசியதை பிடித்து கொண்ட ஆங்கில மீடியாக்கள் அனைத்தும், காஷ்மீர் மக்களுக்கு மிகப் பெரிய தண்டனையை மோடி அரசு கொடுத்திருக்கிறது என்பதைத்தான் ஜவடேகரின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது என விளாசித் தள்ளினர். உண்மையில் ஜவடேகரின் வார்த்தைகள் அப்படியே வஞ்சப்புகழ்ச்சியாக தெரிகிறது. யார் அதை படித்தாலும் அமித்ஷாவின் முடிவை புகழ்வது போல் இகழ்கிறாரோ என்று எண்ணத் தோன்றும்.
மீடியாக்கள், ஜவடேகரின் கருத்துக்கு பொருள் கொடுக்கத் தொடங்கியதும் விழாவை நடத்திய மத்திய தகவல் தொடர்பு துறை அவசர, அவசரமாக ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், அமைச்சரின் பேச்சு, சமுதாய வானொலிகளின் தேவை குறித்த கருத்தில் பேசப்பட்டவை. அதையே திரித்து காஷ்மீர் பிரச்னையுடன் ஒப்பிட்டு எழுதுவது பத்திரிகை தர்மம் ஆகாது. இது மோசமான ஜர்னலிசம் என்று கூறியிருக்கிறது.
ஆனாலும், சில சமயங்களில் மத்திய அமைச்சர்கள் உண்மையை பிரதிபலிக்கிறார்கள் என்று டெல்லி மூத்த பத்திரிகையாளர்கள் கிண்டலடித்து சிரிக்கிறார்கள்.
காஷ்மீரில் மீண்டும் மொபைல் போன் சேவை; சீத்தாராம் யெச்சூரியும் ஸ்ரீநகர் பயணம்