வங்கி இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய பொருளாதாரம் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்), கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித்துறை, வேளாண் விளைச்சல் ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவு காரணமாக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட நிதிக் கொள்கை அறிக்கையில் 2019 - 20 நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்தை கடந்த ஜூன் மாதம், 7 சதவித்ததில் இருந்து 6.9 சதவீதமாக குறைத்தது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.8 முதல் 6.6 சதவீதமாகவும் இரண்டாம் பாதியில் 7.3 முதல் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதற்கு முன் கடந்த 2012- 2013ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 4.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 12ஆக குறைக்கப்படும். சர்வதேச தரத்திற்கு இந்திய பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பல ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டு, அதன் மூலம் பல லட்சம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு மத்திய பிஜேபி அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். நாடு எப்போது இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகிறது. இதனை சீர் செய்வதை விட்டு மேலும் மேலும் தவறான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவது என்பது இந்திய ஜனநாயகத்தை கேள்வி க் குறியாக்கி விடும்.
ஆகவே வங்கிகள் இணைப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தும், அதே வேளையில் பொருளாதாரத்தை மேம்படுத்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முஸ்தாபா கூறியுள்ளார்.
திமுகவில் தலைவர்களுக்கு பஞ்சமாகி விட்டது... அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்