கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை கைது செய்ததை எதிர்த்து ஒக்கலிகர் சமுதாயத்தினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இதனால், ராமநகரம், மைசூரு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் பெரும் பணக்காரர். குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் அகமது படேலை தோற்கடிப்பதற்கு பாஜக முயன்ற போது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தனது ரிசார்ட்டில் தங்க வைத்து, அகமது படேல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.
சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டவரும் இதே சிவக்குமார்தான். ஆனால் அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு குறி வைத்து வந்தது. ஏற்கனவே குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போதே சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர், சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, சிவக்குமாருக்கு அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். டி.கே.சிவக்குமாரிடம் மாலை வரை விசாரணை நடத்தி விட்டு அவரை கைது செய்தனர். சிபிஐயும் வழக்கு தொடுத்துள்ளது. மேலும், சிவக்குமாரின் 22 வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி, இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.
இந்நிலையில், சிவக்குமார் கைது செய்யப்பட்டதால், கர்நாடகாவில் அதிக அளவில் ஒக்கலிகர் சமுதாயத்தினர் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் சிவக்குமார் கைது செய்யப்பட்டது மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தொழிலதிபர் சித்தார்த்தா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சிவக்குமாரும் கைதாகியிருப்பதுதான். காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு மருமகன்தான் சித்தார்த்தா. அவர் தனது தற்கொலைக்கு வருமானவரித் துறையின் துன்புறுத்தல்கள்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்திருந்தார்.
இந்த சூழலில், பெங்களூரு மற்றும் புறநகர்கள், சிவக்குமாரின் சொந்த மாவட்டமான ராமநகரம் ஆகிய இடங்களில் நேற்று பெரும் ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 30 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், அரசியல் களத்தில் காங்கிரசை சந்திக்க முடியாமல், பாஜகவினர் கோழைத்தனமாக இப்படி அடக்குமுறைகளை ஏவிவிடுகிறார்கள். மத்திய அரசின் செல்ல நாய்களாகவே சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கப்பிரிவு ஆகிய ஏஜென்சிகள் செயல்படுகின்றன என்று தெரிவித்தார்.
பாஜக அமைச்சரும், ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான சி.டி.ரவி கூறுகையில், ஒக்கலிகர் சங்கத்தினர் தங்கள் போராட்டம் சரியா என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சிவக்குமாருக்கு ஆதரவாக போராடுவதை கைவிட்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்றார்.