ரூ.200 கோடி பரிமாற்றம் செய்த கர்நாடக முன்னாள் அமைச்சர்.. அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

D K Shivakumar, family, aides have 317 accounts, laundered Rs 200 crore: ED

by எஸ். எம். கணபதி, Sep 14, 2019, 09:18 AM IST

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் 317 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாகவும், அவர் ரூ.200 கோடி சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார், மிகப் பெரிய கோடீஸ்வரர். ஓட்டல்கள் உள்பட பல தொழில்களில் ஈடுபட்டு வருபவர். சித்தராமையா அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்து, காங்கிரசை கட்டிக் காத்தவர். குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் அகமது படேலை தோற்கடிப்பதற்கு பாஜக முயன்ற போது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தனது ரிசார்ட்டில் தங்க வைத்து, அகமது படேல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.

சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டவரும் இதே சிவக்குமார் தான். ஆனால் அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு குறி வைத்து வந்தது. ஏற்கனவே குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போதே சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், பல கோடி ரூபாய் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, அவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சிவக்குமாரின் 22 வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது.
டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த சிவக்குமாரை நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே.எம்.நடராஜ் ஆஜராகி, சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் 317 வங்கிக் கணக்குகளை ஆராய வேண்டியுள்ளது.

சிவக்குமார் பல்வேறு சட்டவிரோத பரிமாற்றங்களை செய்துள்ளார். ரூ.200 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளது. அதே போல், அவரது 22 வயது மகள் ஐஸ்வர்யா ரூ.108 கோடிக்கு வங்கி பரிமாற்றம் செய்திருக்கிறார். எனவே, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், அவரை மேலும் 5 நாள் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதை ஏற்ற நீதிபதி அஜய்குமார் குஹார், காவலில் இருக்கும் சிவக்குமாரை தினமும் அவரது குடும்பத்தினர் அரை மணி நேரம் சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும். டாக்டரை சந்திக்கவும், மருந்து, மாத்திரைகள் தரவும் அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.

You'r reading ரூ.200 கோடி பரிமாற்றம் செய்த கர்நாடக முன்னாள் அமைச்சர்.. அமலாக்கத் துறை குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை