இந்தியாவில் பல மொழிகள் இருப்பது அதன் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார்.
இந்தியாவை உலகிற்கு அடையாளப்படுத்த நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.
இதற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளுமே இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் வரும் 20ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மராத்தி, உருது, ஆங்கிலம் உள்பட 23 மொழிகளை குறிப்பிட்டு, ஒவ்வொன்றுக்கும் அருகே தேசியக் கொடி எமோஜியையும் வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.