பிரதமர் மோடியின் ஹுஸ்டன் பேச்சை கிண்டலடித்து, திகார் சிறையில் உள்ள ப.சிதம்பம் ட்விட் பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் வகையில் ஹூஸ்டனில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹவ்டி மோடி என்று தலைப்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நலமா மோடி என்று கேட்டிருக்கிறீர்கள். இந்தியாவில் எல்லாம் சவுக்கியம்' என்று தமிழில் குறிப்பிட்டார். மேலும் 8 இந்திய மொழிகளிலும் அதைச் சொன்னார்.
இதை கிண்டல் செய்து. திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த 5ம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது.
சிறையில் இருந்தபடியே, தனது குடும்பத்தினர் மூலம் ட்விட்டரில் அவ்வப்போது தனது கருத்துக்களை சிதம்பரம் பதிவிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்ட பதிவில், பாரத் மை சாப் அச்சா ஹை. வேலையில்லா திண்டாட்டம், இருக்கும் வேலைகளும் இழப்பு, குறைந்த ஊதியம், கும்பல் வன்முறை, காஷ்மீரில் முழு ஊரடங்கு, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் தூக்கிப் போடுவது ஆகியவற்றைத் தவிர மீதி எல்லாமே சவுக்கியம் என்று கூறியிருக்கிறார்.