பாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா? எஸ்.டி.பி.ஐ. பாகவி கவலை..

Admk ministers becomes Bjps mouth piece

by எஸ். எம். கணபதி, Oct 8, 2019, 16:47 PM IST

அதிமுக அமைச்சர்கள், பாஜக தொண்டர்களாகவே மாறி விட்டதை அதிமுக தலைமை கண்டுகொள்ளுமா? என்று தெஹ்லான் பாகவி கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி, பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுகிறது என்கிற கருத்து மிக வலிமையாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போலவே தமிழ்நாட்டினுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட போதும், தமிழக அரசினுடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட போதும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு சிறு கருத்தை கூட பதிவு செய்வதற்கு அதிமுகவின் பொறுப்பாளர்களும், அமைச்சர்களும் தயாராக இல்லை. இதையும் தாண்டி சமீபகாலமாக அதிமுகவின் சில அமைச்சர்கள் பாரதிய ஜனதாவின் குரலாகவே மாறி ஏன், பாரதிய ஜனதாவின் தொண்டர்களாகவே மாறி பேசிவருகின்றனர்.

வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் சிறுபான்மை சமூக மக்களுடைய வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் தான் அதிமுக தோற்றது என்பதில் இருந்து அதிமுக பாடம் கற்றுக்கொள்ள தயாராகவில்லை என்பதைத்தான் அதிமுக அமைச்சர்களின் தொடர்ச்சியான கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. மிக குறிப்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றோர் பாரதிய ஜனதாவின் ஊது குழல்களாகவே மாறி பேசி வருகின்றனர்.

மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதை ஆதரித்துப் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார். ஏற்கனவே, அந்த மோடியா, இந்த லேடியா என ஜெயலலிதா கர்ஜித்ததையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அவர் மோடியை டாடி என்று பேசியது சர்ச்சையானது. தொடர்ந்து இந்துத்துவா கருத்துக்களை அவர் பேசி வருவதும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன.

இந்துத்துவா ஆதரவு கருத்துக்கள் மாத்திரமின்றி, அதிமுகவை மக்கள் கேலிப் பொருளாக பார்க்கிற விதத்திலும் சிலர் பேசி வருகிறார்கள் என்பதையும் அதிமுகவின் தலைமை கவனத்தில் கொள்வது நல்லது.

துணை முதல்வரின் மகன் ரவீந்தரநாத், சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்று பேசிய உரை, அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன், காற்றடித்ததால் தான் பேனர் விழுந்தது. சுபஸ்ரீ மரணத்திற்கு காற்றுதான் காரணம் என்று பேசியது ஆகியவற்றால் அதிமுகவை பற்றிய பார்வைகள் பொது மக்களிடமும், பாஜகவினரின் வாழ்த்து மழைக்காக இந்துத்துவா ஆதரவு கருத்துக்களை பேசுவதால் சிறுபான்மை சமூக மக்களிடமும், படித்தவர்களிடமும் என்ன மாதிரியான பதிவை அவர்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதனை அதிமுகவினுடைய தலைவர்கள், முதலமைச்சர் உள்ளிட்டோர் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை. அல்லது அவர்களும் இந்த கருத்தில் உடன்படுகிறார்களா என்பதும் புரியவில்லை.

ஏற்கனவே மக்களிடையே பின்னடைவை சந்தித்து இருக்கிற அதிமுக, சிறுபான்மைச் சமூக மக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த மக்களிடமிருந்தும் விலகிச் செல்வதற்கு இதுபோன்ற அமைச்சர்களினுடைய பேச்சுக்களும், கருத்துக்களும் காரணமாகிவிடும் என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுபவர்களுக்கு கடிவாளமிடுவதற்கு அதிமுக தலைமை முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெஹ்லான் பாகவி கூறியுள்ளார்.

You'r reading பாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா? எஸ்.டி.பி.ஐ. பாகவி கவலை.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை