ரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...

Rajini instruct his fans not to contest Localbody elections

by எஸ். எம். கணபதி, Dec 10, 2019, 14:52 PM IST

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சுயேச்சையாகவோ, மன்றப் பெயரிலோ போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என்று ரஜினி தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது பற்றி, திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் எம்.கலீல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நமது தலைவர் ரஜினிகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரையோ, கொடியையோ, ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலத் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர், மாவட்டச் செயலாளரை தொடர்பு கொண்டு இந்த செய்தியை கண்டிப்புடன் வலியுறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

You'r reading ரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை... Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை