இந்தியாவில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்காக `பிஎம் கேர்ஸ் என்பது ஆரம்பிக்கப்பட்டது. பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக கொடுத்தனர்.
அதன்படி கடந்த ஐந்து மாதங்களாக பிஎம் கேர்க்கு நிதிகள் வந்துகொண்டிருக்கின்றன. இதில் மொத்தம் எவ்வளவு நிதி சேர்ந்திருக்கிறது என்று கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது பி.எம் கேர் இணையதளத்தில் முதல் ஐந்து நாட்களில் எவ்வளவு நிதி சேர்ந்தது என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பி.எம் கேர் நிவாரண நிதிக்கு முதல் ஐந்து நாளில் மட்டுமே 3 ஆயிரத்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களின் பெயர்களை ஏன் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தற்போது இதற்கு பிரதமர் மோடி, தனது சொந்த சேமிப்பிலிருந்து ரூ.2.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதுவரை 103 கோடி ரூபாயை பல்வேறு திட்டங்களுக்கு மோடி நன்கொடையாக கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி, ``சொந்த சேமிப்பு, பரிசுத்தொகை மற்றும் பரிசுப்பொருட்களை ஏலம் விடுத்தல் மூலம் கிடைக்கும் பணம் ஆகியவற்றை பெண் குழந்தைகளின் கல்விச் செலவு, கங்கையைச் சுத்தப்படுத்துதல் எனப் பல்வேறு பணிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த 2019-ல் நடந்த கும்பமேளா விழாவில் பக்தர்களுக்கு சுகாதார வசதிகளைச் செய்வதற்காக தனது சொந்த சேமிப்பிலிருந்து ரூ.21 லட்சம் கொடுத்த பிரதமர் அதேவருடம், தென்கொரியா அரசு சார்பில் சியோல் அமைதிப் பரிசு விருதின் மூலம் கிடைத்த ரூ.1.30 கோடி ரொக்கப் பரிசை கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டத்துக்கும், குஜராத்தில் முதல்வர் பதவியை விட்டு 2014-ம் ஆண்டு விலகும்போது, தன்னிடம் இருந்த சேமிப்பான ரூ.21 லட்சத்தை குஜராத் அரசின் பெண் குழந்தைகள் கல்வித் திட்டத்துக்கும் நன்கொடையாக கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இப்படி இதுவரை ரூ.103 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.