துரோகி, பச்சோந்தி, பதவிவெறியர்.. முதல்வரை திட்டும் நமது எம்ஜிஆர்..

by எஸ். எம். கணபதி, Jan 30, 2021, 09:51 AM IST

நன்றி கெட்டவர், நம்பிக்கை துரோகி, பச்சோந்தி, பதவி வெறியர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா, கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஓரிரு நாளில் சென்னைக்கு திரும்பலம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அதிமுகவில் நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் உள்பட சில நிர்வாகிகள், சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினர். அவர்களை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இன்று(ஜன.30) அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளோடான நமது எம்ஜிஆர் நாளிதழில், ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும்... என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், அம்மாவின் தொண்டர்கள் கூட்டாக பேசிக் கொண்டே சென்றார்கள். அதில் ஒருவர், அம்மா இருக்கும் வரை நாட்டிற்கும் பாதுகாப்பு, தொண்டர்களுக்கும் பாதுகாப்பு, பொது மக்களுக்கும் பாதுகாப்பு என்று அனைத்து தரப்பு மக்களும் பேசுவது காதில் ஒலிக்கிறது. அப்போது குறுக்கிட்ட ஒருவர், இன்றைக்கு நிலவும் அவல நிலை, கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், வன்முறை போன்றவைகளை பார்த்தால் எங்கே அம்மாவின் கர்ஜனை, வீரசபதம் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற வேதனையை சொல்ல முடியாமல் உள்ளக் குமுறலால் நொடிந்து போயிருக்கிறேன் என்றார் என கூறப்பட்டிருக்கிறது.

மேலும், இப்படி எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து, திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து அந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தீயசக்தி கூட்டமும் துரோகமும் ஒன்று சேர்ந்து கொண்டு தமிழகத்தை கூறு போட 60க்கு 40 என்று பாகம் பிரித்து கொண்டு ஊழலில் திளைத்தால் மக்கள் ஆட்சியா நடக்கும்? இவர்கள் அம்மாவின் ஆட்சி என்று பகல் வேஷம் போட்டு தமிழக மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றி வருவது கவலை அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினரும், திமுகவினரும் கைகோர்த்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

மேலும் அதில், அம்மாவின் மறைவுக்கு பிறகு கட்சியைக் காப்பாற்றி, முதலமைச்சர் பதவியை தக்கவைத்து தந்திட்ட அத்தகைய ஒப்பற்ற தியாகத் தலைவியை(சசிகலா) கட்சியை விட்டு நீக்குகிறோம், 100 சதவீதம் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று மனசாட்சியை விற்று விட்டு, நன்றி கெட்ட மனிதராக வலம் வருவது, இப்படி உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் துரோகிகளுக்கு இனி சரித்திரத்தில் பச்சோந்திகள், நம்பிக்கைத் துரோகிகள் என்ற அடையாளம் மட்டுமே வரலாறாக பேசப்படுமே தவிர இவர்களால் அம்மாவின் ஆட்சியை அமைக்க முடியாது. அம்மாவின் தொண்டர்களையும் காத்திட முடியாது என்பதே உண்மை.

இப்படிப்பட்ட துரோகிகள் எத்தனை தடை போட்டாலும், ஆணை போட்டாலும் அம்மாவின் தொண்டர்களை இனியும் தடுக்க முடியாது. மடை திறந்த வெள்ளம் போல் படைதிரண்டு வந்து தியாகத் தலைவியை வரவேற்பார்கள். தியாகத் தலைவி சின்னம்மா தலைமையில் கழகம்(அதிமுக) மீட்டெடுக்கப் போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. எத்தனை சதிகளை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகி விடும்.

தமிழகத்தில் நடப்பதை மக்கள் அறிவார்கள். விரைவில் தமிழக மக்களை தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் சந்திக்கப் போகிறார்கள். ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் வஞ்சகப் பிறவிகளின் சுயரூபத்தை மக்களிடையே வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டது. அப்போது உண்மையை வெளிப்படுத்துவார்கள்.

ஆளாக்கியவரை அவதூறு பேசும் அர்ப்பர்களின் முகத்திரையை கிழிப்பார்கள். கோபுரத்து பொம்மைகள் எல்லாம் இன்று ஆணையிட்டு தடை போட ஆளாய் பறக்கிறது. அந்த கோபுரத்தையே தாங்கி நிற்கும் பூமியாக இருப்பவர் தியாகத் தலைவி சின்னம்மா தானே. அத்தகயைவருக்கே தடை போடும் பச்சோந்திகள் குறை கூறுவதற்குள் விபரீதத்தை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். பதவி வெறியர்களே வேஷம் போடாமல் விசுவாசத்தை காட்டுங்கள். குதர்க்க அரசியல் செய்யும் கோமாளிகளை போன்று பொய்களை இட்டுகட்டி பேசுவதை தவிர்த்திடுங்கள். பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு கைகட்டி சரணாகதி அடைந்து நிற்பதும் பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும். திரைமறைவு அரசியல் நடத்துவதை அம்மா போல் சின்னம்மாவும் விரும்புவதில்லை.

தனியாக நின்றுடெபாசிட் கூட வாங்க யோக்கியதை இ்ல்லாத பச்சோந்தி கூட்டங்கள் எல்லாம் தொண்டர்களிடம் பசப்பு வார்த்தை பேசி, பாசாங்கு நாடகம் நடத்தி ஆணை போட்டு தடுத்தாலும் மீண்டும் உங்களால் கோட்டை ஏற முடியாது.

சீண்டுவாரின்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்த சின்னம்மாவிடம் காட்டும் விசுவாசம் இதுதானா? கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும் என்பதை மறந்து விட்டு, மலை உச்சியில் கொண்டு போய் அமர வைத்த தியாகத் தலைவியிடமே வாலாட்டுவதா?
இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading துரோகி, பச்சோந்தி, பதவிவெறியர்.. முதல்வரை திட்டும் நமது எம்ஜிஆர்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை