அமைச்சர் உதயகுமாரின் குடோனில் திடீர் ரெய்டு.. கம்ப்யூட்டர்கள், சேலைகள் பறிமுதல்..

by எஸ். எம். கணபதி, Mar 18, 2021, 12:36 PM IST


மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மணிமாறன், அமமுக சார்பில் ஆதிநாராயணன் போட்டியிடுகிறார்கள்.

அமைச்சர் உதயகுமார் கடந்த சில மாதங்களாகவே தொகுதியில் பலருக்கும் பணம், பரிசுப் பொருட்களை அளித்தும், பிரியாணி விருந்துகளை நடத்தியும் வந்தார். இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் அவர் கம்ப்யூட்டர்கள் உள்பட பரிசுப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இது பற்றி, தேர்தல் அதிகாரிகளிடம் திமுகவினர் புகார் கொடுத்தனர். மேலும், நேற்று(மார்ச்17) மாலை அந்த குடோன் பகுதியில் திமுகவினர் குவிந்தனர்.

இதைத் தொடர்ந்து, தொகுதி தேர்தல் அதிகாரி சவுந்தர்யா, பறக்கும் படை அதிகாரி சசிகலா, திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் குடோனுக்கு வந்தனர். இந்த தகவல் பல திசைகளிலும் பரவியதால், திமுக மட்டுமின்றி அமமுக உள்ளிட்ட மற்ற கட்சி நிர்வாகிகள் குடோன் முன்பாக குவிந்தனர். குடோன் சாவியை கேட்டபோது, குடோன் பொறுப்பாளர் தன்னிடம் சாவி இல்லை எனக் கூறினார்.

இதையடுத்து, அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முடிவு செய்தனர். அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிமுகவினருக்கும், திமுக மற்றும் அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், குடோன் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையிட்டனர். அங்கு நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்கள், அமைச்சர் உதயகுமார் படம் போட்ட பிளாஸ்டிக் வாளிகள், வேட்டிகள், துண்டுகள் இருந்தன. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படம் போட்ட ஆயிரக்கணக்கான கவர்களும்(பணம் இல்லை) கட்டுக்கட்டாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவை வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். 300 கம்ப்யூட்டர்கள், 300 சேலைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் உதயகுமார் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு அதிமுக ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு தருவதற்காக வைத்திருந்ததாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கொடுக்க முடியாமல் போனதாகவும் விளக்கம் கொடுத்தார்.

You'r reading அமைச்சர் உதயகுமாரின் குடோனில் திடீர் ரெய்டு.. கம்ப்யூட்டர்கள், சேலைகள் பறிமுதல்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை