திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்து. இதனால், அதிமுகவினர் தோல்வி பயத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் வரை விநியோகித்து வருகின்றனர். இதனிடையே வருமான வரித்துறையினர் தீவிர சோதனைகளை நடத்தி, பணம், நகைகளை கைப்பற்றி வருகின்றனர். கடலூர் அமைச்சர் சம்பத் உள்பட அதிமுக வேட்பாளர்கள் பலரின் வீடுகளில் இருந்து பல கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று(ஏப்.2) அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தாமரை தனது கணவர் சபரீசனுடன், சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இன்று அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வருமானவரித் துறை, சிபிஐ போன்றவற்றை வைத்து மத்திய ஆட்சியாளர்கள் மிரட்டுகிறார்கள். பிரதமர் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக என்பதை மறந்து விடாதீர்கள். நான் கலைஞரின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். மிசாவையே, பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கொஞ்சமும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளது. இப்போது ரெய்டு நடத்தினால் திமுககாரன் வீட்டில் முடங்கிப்போய் கிடப்பான் என்று நினைக்கிறார்கள். அது அதிமுகவினரிடம் நடக்கும். அவர்கள் மாநில உரிமைகளை எல்லாம் விட்டு கொடுத்து, காலில் விழுந்து கிடக்கலாம். ஆனால், நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் பதில் தரக்கூடிய நாள் தான் ஏப்ரல் 6 என்பதை மக்கள் மறந்து விடக் கூடாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.