வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகக் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 72.8% வாக்குகள் பதிவானது. மாநிலத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனிடையே வேளச்சேரி தொகுதியில் வேளச்சேரி தொகுதியில் கடந்த 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நாளில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு வி.வி.பாட் எந்திரமும் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொகுதியில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் வி.வி.பாட் எந்திரம் வேளச்சேரி தொகுதியில் 92-வது வாக்குச்சாவடியில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. 15 ஓட்டுகள் அதில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 92-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்களர்களுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆண் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று பதிவு செய்யப்படும் வாக்குகளும் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன.