வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னையை துடைத்து எறிந்தது திமுக. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியைத்தழுவினர். ஆனால், ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் வெற்றி பெற்றுவிடுவார் என பெரும்பாலானோர் கருதிய நிலையில், அது பொய்யானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி 49,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜெயக்குமார் 30,061 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.
அதிமுக ஆட்சியில் மீன்வளம், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெயக்குமார், தினந்தோறும் செய்தியாளர்களைச் சந்திந்து அதிமுக அரசின் குரலாக பதிலளிப்பார். இந்நிலையில் அவரது தோல்வி அதிமுகவினரிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் தோல்வி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெயக்குமார், ''வெற்றியோ,தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்களுடனேயே பயணிப்பேன் வாக்களித்த, வாக்களிக்காத இராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! நான் எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும். நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கான ஒருவன் தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.