யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி பயணமாக உள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
வரும் 20 ஆம் தேதி இதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவுடன் நாராயணசாமி பயணம் செய்ய உள்ளார். அப்போது அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
தனி மாநில அந்தஸ்துடன், சிறப்புப் பொருளாதார அந்தஸ்தும் புதுச்சேரி மாநிலத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
சமீபத்தில் புது டெல்லி குறித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘துணை நிலை ஆளுநரை விட, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முடிவு எடுக்கும் உரிமை இருக்கிறது’ என்று கூறியது. இதையடுத்து நாராயணசாமி, ‘டெல்லியின் நிலைமை புதுச்சேரிக்கும் பொருந்தும். எனவே, ஆளுநர் கிரண் பேடி அதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்’ என்றார்.