நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதே நேரத்தில், ஒரு கட்டத்தில் ராகுல் பேசிக் கொண்டிருக்கும் போது, மோடி கலகலவென சிரித்ததும் கவனத்துக்கு உள்ளானது. ரஃபேல் ஒப்பந்தம் முதல் நாட்டின் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினார் ராகுல்.
அவர் பேசும்போது, பாஜக எம்.பி-க்கள் பலர் கூச்சலிட்டனர். ‘பிரதமர் வெளியாடு போகிறார். ட்ரம்ப் ஜி, ஒபாமா ஜி-க்களை சந்திக்க பிரதமர் வெளியாடு செல்கிறார்’ என்று கூற, பிரதமர் உள்ளிட்ட பல பாஜக-வினர் வாய்விட்டு சிரித்தனர். அதேபோல, ‘மோடி, என் கண்ணைப் பார்க்க மறுக்கிறார். அவர் உண்மையாக இல்லை’ என்று கூறும் போதும் மோடி சிரித்தார்.
தனது உரையின் முடிவில் ராகுல், 'நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம். ஆனால், உங்கள் மீது எனக்கு எந்த வித வெறுப்பும் இல்லை. இது தான் ஒரு இந்துவாக இருப்பது என்று நான் கூறுவேன்' என்று சொல்லி, மோடியின் இருக்கைக்கு வந்து அவரை ஆரக்கட்டித் தழுவினார்.
இப்படி, இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.