ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் புதிய ஆளுநரை நியமிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது அங்கு ஆளுநராக இருக்கும் என்.என்.வோராவை சீக்கிரமே மாற்றும் முயற்சியில் மத்திய அரசு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வோரா தான் ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிகிறது.
அடுத்த ஆளுநரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அதில் முன்னாள் உள்துறை செயலாளர் ஒருவரின் பெயர் இருப்பதாகவும் நம்பத்தகுந்த அரசியல் வட்டாரம் கூறுகின்றது. பாஜக - பிடிபி கூட்டணி அமைத்து ஜம்மூ- காஷ்மீரில் ஆட்சி நடத்தி வந்தன.
ஆனால், இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக, கூட்டணியிலிருந்து விலகியது. இதையடுத்து அம்மாநில முதல்வராக இருந்த மெஹுபுபா முப்டி பதவி விலகினார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 20 ஆம் தேதி ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான் புதிய ஆளுநரை நியமிக்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது.