கடலுக்கு செல்லும் காவிரி... காயும் கடைமடை- ராமதாஸ் வேதனை

Aug 1, 2018, 17:06 PM IST
காவிரி நீர் கடைமடைக்கு சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மேட்டூர் அணை நிரம்பி வழிந்தும் கூட  கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை நெல் பயிர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் பெரும் பகுதி விவசாயத்துக்குப் பயன்படாமல் வங்கக் கடலில் கலந்து வீணாகியிருக்கிறது.
 
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அடுத்த 3 நாட்களில் கல்லணைக்கும், அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து கடைமடை பகுதிகளையும் சென்றடைவது வழக்கமாகும். அதாது மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அடுத்த 10 நாட்களுக்கு அனைத்து காவிரி பாசனப் பகுதிகளுக்கும் சென்றடைந்தாக வேண்டும். 
 
வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் திறந்து  விடப்பட்டால் இன்னும் கூடுதலாக கடைமடைப் பாசனப் பகுதிகளை சென்றடைந்து விடும். ஆனால், இம்முறை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்றுடன் 13 நாட்களாகியும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை. 
 
காவிரி ஆறு பூம்புகார் கடலில் கலப்பதற்கு முந்தைய இடமான நாகை மாவட்டம் மேலையூர் கடைமடைத் தேக்கத்திற்கு கடந்த  ஜூலை 29-ஆம் தேதியே தண்ணீர் வந்து விட்ட போதிலும், அதற்கு முன்பாக உள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் சென்றடையவில்லை. அதேநேரத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் வழியாக கிட்டத்தட்ட 16 டி.எம்.சி. வீணாக கடலில் கலந்துள்ளது. இதை விட மிகக்கேவலமான நீர் மேலாண்மை வேறு எங்கும் கடைபிடிக்கப்படாது.
 
வழக்கமாக காவிரி பாசன மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 16 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் செய்யப்படுவது வழக்கம். நடப்பாண்டில் ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்பதால், நிலத்தடி நீரை நம்பி நடப்பாண்டில் தஞ்சை, நாகை மாவட்டங்களில் தலா 35,000 ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 24,500 ஹெக்டேர் என மொத்தம் 94,500 ஹெக்டேரில், அதாவது 2,36,250 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. 
 
இடைப்பட்ட காலத்தில் மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வரத் தொடங்கியதால் அதை நம்பி பெருமளவிலான விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் குறுவை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். ஜூலை மாத இறுதி வரை காவிரி பாசன மாவட்டங்களில் 1.05 லட்சம் ஹெக்டேரில், அதாவது 2.63 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் வறட்சியான சூழல் நிலவுகிறது. புதிதாக நேரடி விதைப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்யலாம்; பயிரைக் காப்பாற்றி விடலாம் என்றாலும் கூட நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன், சாகுபடி செலவுகளும் அதிகரிக்கும். 
 
அதுமட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து எந்த நோக்கத்திற்காக  தண்ணீர் திறந்து விடப்பட்டதோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு காரணமே காவிரியின் கிளை ஆறுகளிலும், பாசனக் கால்வாய்களிலும் தூர் வாரப்படாதது தான். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி அதிமுகவினரால் சுருட்டப்பட்டு விட்டது. பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சொந்த செலவில் தூர்வாரியப் பகுதிகளில் மட்டும் தான் நீர் சென்றுள்ளது.
 
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. நடப்பாண்டிலாவது  மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளிலும், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 
கடந்த மாதம் 19-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு விழாவில் தடுப்பணைகள் கட்டுவது குறித்த முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தடுப்பணைகளை கட்டவும், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் நலனில் அக்கறையற்ற பினாமி அரசு அதை செய்யாததன் விளைவு தான் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
 
மேட்டூர் அணையிலிருந்து கடந்த வாரம் வினாடிக்கு 76,611 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டது. அப்போதே காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையில், நேற்று முதல் வெறும் 19,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில் நிச்சயமாக கடைமடைக்கு தண்ணீர் சென்றடையாது. இதனால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும். 
 
இதைத் தடுக்க காவிரி கிளை ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதுடன், அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக காவிரி படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகளை கட்ட அரசு முன்வர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். 

You'r reading கடலுக்கு செல்லும் காவிரி... காயும் கடைமடை- ராமதாஸ் வேதனை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை