சென்னையில் திமுக நிர்வாகிகள் தாக்கிய பிரியாணி கடை ஊழியர்களை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னையில் விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் தனியார் பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகிறது இங்கு கடந்த 29ம் தேதி இரவு பத்தரை மணியளவில் விருகம்பாக்கம் மாணவரணி அமைப்பாளர் யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் பிரியாணி சாப்பிடுவதற்காக வந்துள்ளனர். அப்போது பிரியாணி தீர்ந்துவிட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த யுவராஜா மற்றும் அவருடன் சேர்ந்த ஓட்டல் ஊழியரை பிரகாஷ் மற்றும் சர்வர் கருணாநிதி ஆகிய 2 பேரையும் கடுமையாக இந்த கும்பல் தாக்கியுள்ளது இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேலும் யுவராஜா ஹோட்டல் ஊழியர்களை பாக்சிங் முறையில் தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை கொடுத்த, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர்களை கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு நேரில் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் கடையின் உரிமையாளரை சந்தித்து ஆறுதல் கூறினார்.