62 தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பவானி அருகே பூக்கடை பகுதியில் வெள்ள நீரில் இறங்கி அமைச்சர்களுடன் நடந்து சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த அப்பகுதி மக்களிடம் குறைகளை அறிந்தார். தங்களுக்கு குடியிருப்புக்கள் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
மக்களின் குறைகளை அறிந்த முதல்வர், முன்னதாக பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்
அதன் பிறகு, செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 67 முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 7832 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
1976 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 114 வீடுகள் பாதி அளவும், 263 வீடுகள் முழுவதுமாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 1599 வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பயிர் சேதத்தை பொருத்தவரை 609.69 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் தண்ணீர் முழுவதுமாக வடியவில்லை. தண்ணீர் வடிந்த பிறகு சேதங்கள் குறித்து கணக்கிடப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.
மேலும், “பவானி மற்றும் மேட்டூர் அணைகளில் அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டதாலேயே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டதற்கு ஆகாய தாமரை படர்ந்தது காரணம் அல்ல. இருப்பினும் நீர்நிலைகளில் இருக்கும் ஆகாய தாமரைகள் அனைத்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி வரும் காலங்களில் காவிரியில் திறந்து விடப்படும் நீரில் வீணாகக் கூடாது என்பதே அரசின் நோக்கம். அதனால் 1511 ஏரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 62 தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளன. கரையோர மக்களுக்கு நிரந்தரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும்” என்றார்.