மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு தவித்த தருணங்களில் தான் ஸ்டாலினை தலைவராக உணர்ந்ததாக அக்கட்சியின் எம்.பி.கனிமொழி உருக்கம் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, " திமுக தொண்டர்களுக்கு இது ஒரு நல்ல நாள். தலைவர் பதவி பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பது சடங்குதான். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு, முதலமைச்சர் முன்பாக தழுதழுத்த குரலில், ஸ்டாலின் நின்றார்"
"ஆனால், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்தது. உடனடியாக மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடலாம் என நாங்கள் ஆலோசனை வழங்கினோம்."
"அன்று ஸ்டாலின் கோபப்பட்டிருந்தால், மொத்த தமிழகமும் ஸ்டாலின் பின்னால் வந்திருக்கும். எத்தனை உயிர்களை இழந்திருப்போம். மனசாட்சியற்ற ஆட்சியாளர்கள் இங்கே இருப்பதால் துப்பாக்கிச் சூடு கூட நடந்திருக்கும்"
"ஆனால், ஒரு தலைவனாக உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயலாற்றினார் ஸ்டாலின். கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றினார். கண்ணியத்தை காத்து தலைவராக நிமிர்ந்து நின்றார். அன்றைய தினம் ஸ்டாலின் காட்டிய நிதானத்தில் தலைமையை உணர்ந்தேன்."