எரிபொருள் விலை உயர்வு வீழ்ச்சிக்கே வித்திடும் - ராமதாஸ்

பெட்ரோல் விலை உயர்வு ராமதாஸ் கண்டனம்

Aug 30, 2018, 13:54 PM IST

உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சிக்கு வித்திடும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Petrol

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை13 காசுகள் உயர்ந்து ரூ.81.35 ஆகவும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து ரூ.73.88 ஆகவும் அதிகரித்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. இது வளர்ச்சிக்கான அறிகுறி அல்ல.

உலக அளவிலான பொருளாதார, வணிக மாற்றங்களின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு என்ற உலக அளவிலான வணிக மாற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றியிருக்க வேண்டிய மத்திய அரசு, அதை செய்யாதது மட்டுமின்றி, அதன் சொந்தத் தவறுகள் காரணமாக நிகழ்ந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மக்கள் மீது சுமத்தியுள்ளது.

இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி உயரத் தொடங்கிய எரிபொருள் விலை, கடந்த 15 நாட்களில் ஒருமுறை கூட குறையவில்லை. அதே நேரத்தில் 12 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரூ.80.14 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.21 உயர்ந்து ரூ.81.35 ஆகவும், டீசல் விலை ரூ.72.59-லிருந்து ரூ.1.29 உயர்ந்து ரூ.73.88 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி முதல் இன்று வரையிலான ஒரு மாத காலத்தில் பெட்ரோல் விலை ரூ.2.15, டீசல் விலை ரூ.2.33 என்ற அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 16.07 ரூபாயும், டீசல் விலை 17 ரூபாய் 98 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதில்லை.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முடியாதா? என்று கேட்டால் கண்டிப்பாக முடியும் என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் தங்களின் ஒட்டுமொத்த வரி வருவாயில் பெரும்பகுதியை எரிபொருட்கள் மூலம் திரட்டத் துடிப்பது தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து அரசுகள் கவலைப்படவில்லை.

Ramadoss

இந்தியாவில் 2014 - 2015-ஆம் ஆண்டுகளில் மட்டும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் சுமார் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாத மத்திய அரசு, அதே அளவுக்கு வரிகளை உயர்த்தியது. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

இது பெருநிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் ஆகும். கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதெல்லாம், இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் வரிகள் குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதை செய்யவில்லை.

மற்றொருபுறம் மாநில அரசுகளும் போட்டிப்போட்டுக் கொண்டு வரி வசூலிக்கின்றன. தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 34% ஆகவும், டீசல் மீதான விற்பனை வரி 25% ஆகவும் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.66 விற்பனை வரியாக வசூலிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு வசூலிக்கும் ரூ.19.48 கலால் வரியில் மாநில அரசின் பங்காக கிடைக்கும் ரூ.8.18-ஐயும் சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் தமிழக அரசுக்கு ரூ.27.84 வருமானம் கிடைக்கிறது.

அதேபோல், டீசல் விற்பனையில் விற்பனை வரியாக ரூ. 12, மத்திய கலால் வரி வருவாயில் மாநில அரசின் பங்காக ரூ.6.50 என ரூ.18.50 வருமானம் கிடைக்கிறது.மத்திய அரசும், மாநில அரசுகளும் எரிபொருட்களை வருவாய் ஈட்டித் தரும் பொருட்களாக மட்டுமே பார்ப்பதால் வரியைக் குறைக்க மறுக்கின்றன. நாட்டின் உற்பத்திக்கும், அதன்மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கியாக திகழ்வது பெட்ரோல், டீசல் தான் என்பதை அரசுகள் உணர மறுக்கின்றன.

மோட்டார் வாகனப் போக்குவரத்தில் தொடங்கி தொழிற்சாலைகள் வரை அனைத்துக்கும் எரிபொருட்கள் தான் முக்கிய ஆதாரம் ஆகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வாகனங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்தின் இயக்கச் செலவுகளும் அதிகரிக்கும்; அதன் காரணமாக உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயரும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்; பொருளாதார வளர்ச்சிக் குறையும். இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது மக்கள்தான்.

எனவே, வரி வருவாய் என்ற குறுகியப் பார்வையில் இந்த விலை விவகாரத்தை அணுகக்கூடாது. மாறாக பொருளாதார வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப் பார்வையுடன் இதை அரசு அணுக வேண்டும். உடனடியாக வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலைகள் குறைவதை உறுதி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

You'r reading எரிபொருள் விலை உயர்வு வீழ்ச்சிக்கே வித்திடும் - ராமதாஸ் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை