தன் அரசாங்கத்தை பற்றிய நேர்மறை செய்திகள் மக்களிடம் சென்று சேர்வதை தடை கூகுள் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.
“கூகுளும் மற்ற நிறுவனங்களும் பாரம்பரிய கருத்துகள், நல்ல செய்திகள், தகவல்களை மறைக்கின்றன. நாம் காணக்கூடியவற்றையும், காண இயலாதவற்றையும் அவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். இந்த மோசமான நிலையை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று பொருள்படும்படி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
தன்னுடைய உரைகளை இருட்டடிப்பு செய்வதோடு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் உரைகளுக்கு முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை கொடுப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
"எந்த அரசியல்ரீதியான கருத்தையும் நிலைப்படுத்தும் வண்ணம் கூகுள் தேடுதல் வடிவமைக்கப்படவில்லை. தேடுபொறி, எந்த அரசியல் சித்தாந்தத்திற்கும் பாரபட்சம் காட்டாது. பயனர்களின் தேவைக்கேற்ப உயர்தர தகவல்கள், தரவுகள் கிடைக்கும்வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான முன்னேற்றங்களை செயல்பாட்டில் கொண்டு வருகிறோம்.
கூகுளின் தேடுபொறியின் செயல்தரத்தை உயர்த்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அரசியல் நம்பிக்கைகளை மாற்றும் வண்ணம் ஒருபோதும் தேடுதல் முடிவுகளை வகைப்படுத்தியதில்லை," என்று கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.