அமைச்சர் மீது ஊழல்... நடவடிக்கை எடுக்காதது ஏன்..?- ராமதாஸ்

அமைச்சர் மீது ஊழல்... நடவடிக்கை எடுக்காதது ஏன்..?

Sep 1, 2018, 21:23 PM IST

அமைச்சர் மீதான ஊழல் புகார் தொடர்பான வருமானவரித் துறை கடிதம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ramdass

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல்கள் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக் குவித்தது குறித்தும், இயற்கை வளக் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை புகார் அளித்தும் அப்புகார்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊழல் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பாற்ற முதல்வர் துடிப்பது கண்டிக்கத்தக்கது.சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து தமிழக அரசுக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதிய வருமானவரித் துறை, அவற்றின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

அக்கடிதத்தின் நகலையும், அக்கடிதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த இல்லத்தில் நடத்தப்பட்ட மொத்தம் ரூ.20 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.12.96 லட்சம் பழுப்பு நிற உறைகளில் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் கடிதம், செவிலியர் இடமாற்ற ஆணை ஆகியவற்றுடன் வைக்கப்பட்டிருந்தாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

உறைகளில் வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் கையூட்டாக பெறப்பட்டதாக விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதவிர, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட 9 பக்க வரவு-செலவு ஆவணத்தில் சுகாதாரத்துறை சார்ந்த நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்காக 2016-ஆம் ஆண்டு ஜுலை முதல் நவம்பர் வரையிலான ஆகிய 5 மாதங்களில் மட்டும் கையூட்டாக ரூ.20.76 கோடி வசூல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

Vijayapaskar

அதுமட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் விதிகளை மீறி 72 மீட்டர் ஆழத்திற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவை விட 850% கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை கூறியிருக்கிறது.

இந்தக் கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் மூலம் சேர்த்ததாக வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப் பட்ட தொகை கடலில் மூழ்கியிருக்கும் பனிக்கட்டியின் முனை அளவு தான்.

அதுவே இந்த அளவுக்கு என்றால் விஜயபாஸ்கர் செய்த ஊழல்கள், அடித்த இயற்கை வளக் கொள்ளைகள் ஆகியவற்றின் உண்மையான மதிப்புகளை கணக்கிட்டால், அதைக் கொண்டு தமிழகத்தில் பாதியை வாங்கி விட முடியும். விஜயபாஸ்கர் செய்த ஊழலை விட நூறு மடங்கு அதிக ஊழலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் தான் ஒரு ஊழல்வாதிக்கு இன்னொரு ஊழல்வாதி ஆதரவு என்ற அடிப்படையில் தான் விஜயபாஸ்கரின் ஊழலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சகித்துக் கொண்டிருப்பதுடன், அவரை சட்டத்தின் கைகளை வளைக்காமல் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குட்கா ஆலைகளில் வருமானவரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து தமிழக அரசு வருமான வரித்துறை எழுதிய கடிதத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், அது குறித்து வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக வாக்களிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த போதிலும் அதன் மீது எந்த மேல்நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் நடப்பது மக்களைக் காப்பதற்கான அரசு அல்ல.... ஊழல்வாதிகளை காப்பதற்கான ஜனநாயக விரோத அரசு.

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்த பிறகும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட அந்த அமைப்பை பினாமி அரசு ஏற்படுத்தவில்லை. அத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் உள்ளே செல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாகவே லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த பினாமி அரசு தயங்குகிறது. இதை அனுமதிக்க முடியாது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

You'r reading அமைச்சர் மீது ஊழல்... நடவடிக்கை எடுக்காதது ஏன்..?- ராமதாஸ் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை