பெட்ரோல்- டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும், எண்ணெய் நிறுவனங்களுக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 10 தினங்களில் மட்டும் ரூ 1.23 உயர்த்தி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. எண்ணெய் விலை ஏற்றம், மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கான அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துகிறது.
எளிய மக்களின் உணவு பொருட்கள், சிறுதொழில்கள், சில்லறை வியாபாரங்கள், மக்கள் அன்றாடம் பயணிக்கும் வாகனங்கள் என அனைத்தும் கடும் பாதிப்பிற்குள்ளாகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரங்களை காரணம்காட்டும் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் விலைகுறையும் போது அதற்கேற்ற வகையில் விலைகளை குறைப்பதில்லை.
தற்போதைய சூழலில் தமிழக அரசு மதிப்புகூட்டுவரியில், மத்திய அரசு உற்பத்தி வரியில், பெருமளவில் குறைக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலை நிர்ணய உரிமைகள் குறித்து மறுசிந்தனை செய்து அத்தகைய உரிமையை அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசின் கண் அசைவில் நாட்டு நலனை பின்னுக்குத் தள்ளி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வானளாவிய அளவுக்கு உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது."
"பெட்ரோல் - டீசல் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, அதிமுக அரசு விற்பனை வரியைக் குறைப்பது உள்ளிட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருப்பதும் மிகவும் பொறுப்பற்ற செயலாகும்."
"ஆகவே, பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த எக்சைஸ் வரியைக் குறைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விற்பனை வரியைக் குறைத்து மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வின் அழுத்தத்தைக் குறைத்திட அதிமுக அரசு முன் வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.