பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதவிட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பேசிய தமிழிசை, "ஒரு தலைவருக்கு அவமானம் என்றால் மற்ற தலைவர்கள் அசிங்க பட வேண்டும். ஆனால் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு வேதனை அளிக்கிறது. ஸ்டாலினிக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்வார்."
"அந்த பெண்மணி விமான நிலையத்தினுள் கையை தூக்கி கோசம் செய்தார். அதற்கு முன்னதாக விமானத்தில் இருந்து டுவிட்டர் செய்ததில், நான் தமிழிசையுடன் விமானத்தில் உள்ளேன் பாஜக ஒழிக என கூறினால் என்னை விமானத்தினுள் இருந்து இறக்கி விடுவார்களா? என கேட்டு பதிவிட்டுள்ளார். எனவே அவர் ஏதோ திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்."
"என் உயிர் குறித்து கூட கவலைப்பட மாட்டேன். போராடித்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். கலைஞராக இருந்தால் இதை போன்ற செயலை செய்து இருப்பாரா? கண்டிப்பாக செய்து இருக்க மாட்டார். ஸ்டாலின் சரியான அரசியல் நடத்தவில்லை."
"எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் இதை உணர வேண்டும். ஸ்டாலினுக்கு இப்படி நடந்தால், முதலில் கண்டிப்பது நானாக இருப்பேன். அந்த பெண்ணிற்கு ஆதரவாக ஸ்டாலின் பதிவிற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.