அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க சதி... ராமதாஸ்

அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க சதி... ராமதாஸ்

Sep 18, 2018, 14:53 PM IST

தமிழகத்தில் நிலவும் அமைதி, நல்லிணக்கத்தை குலைக்கவே, பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Ramadoss

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 140-ஆவது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை அண்ணா சாலையிலும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்க வேண்டும் என்ற சதி தான் இந்த நிகழ்வுகளுக்கு பின்னணி ஆகும்.

சென்னை அண்ணாசாலையில் தந்தை பெரியார் சிலை மீது காலனி வீசிய பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற வழக்கறிஞரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தாராபுரம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலை மீது காலனிகளை வைத்ததாக செங்கல் சூளை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை பெரியாரின் சிலைகளை அவமதிப்பவர்கள் யார்? என்பதை அடையாளம் காண பெரிய அளவில் ஆராய்ச்சிகளை செய்யத் தேவையில்லை. தந்தை பெரியாரின் கருத்துகள் யாருடைய முகத்திரைகளை கிழிக்கிறதோ அவர்கள் தான் இதை செய்திருக்க வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் சிலரால் தூண்டி விடப்பட்டு தான் நடைபெறுகின்றன.

கடந்த மார்ச் மாதம் திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்ட போது, அதேபோன்று தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வெறுப்புத் தீயை மூட்டினார். அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தந்தைப் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட மேலும் பல இடங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத் தான் சென்னை மற்றும் தாராபுரத்தில் தந்தை பெரியாரின் உருவச்சிலைகளை சமூக விரோதிகள் அவமதித்துள்ளனர்.

தந்தைப் பெரியாரை எந்த வரையரைக்குள்ளும் அடக்க முடியாது. அவர் அனைவருக்காகவும் போராடியவர்; அனைத்துக்காகவும் போராடியவர் ஆவார். சமூக நீதி, பகுத்தறிவு என்றால் உடனடியாக நினைவுக்கு வருபவர் தந்தை பெரியார் தான்.

Periyar Statue

தந்தை பெரியார் மட்டும் தமிழகத்தில் அவதரித்து இருக்காவிட்டால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே இருந்திருப்பார்கள்; பறிக்கப்பட்ட சமூகநீதி பறிக்கப்பட்டதாகவே இருந்திருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்காது. இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் தந்தை பெரியாரின் உருவச் சிலை மீது காலனிகளை வீசி தங்கள் வெறுப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

நான் தொடர்ந்து கூறி வருவதைப் போல தந்தை பெரியார் சுயமரியாதையின் அடையாளம், சமூக நீதியின் அடையாளம், பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம். இத்தகைய வலிமை மிக்க அடையாளத்தை அழிக்க எவனாலும் அழிக்க முடியாது. தந்தை பெரியார் உயிருடன் இருந்த போதே, அவர் மீது காலனிகள் வீசப்பட்ட நிகழ்வுகள் நடந்ததுண்டு. அப்போதெல்லாம் அதைக் கண்டு தந்தை பெரியார் கவலைப்பட்டதில்லை. மாறாக எந்தெந்த இடங்களில் எல்லாம் தந்தை பெரியார் மீது காலனி வீசப்பட்டதோ, அந்த இடங்களில் எல்லாம் அடுத்த சில ஆண்டுகளில் அவருக்கு சிலைகள் எழுந்துள்ளன.

தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டதை தனித்த நிகழ்வாக பார்க்கக்கூடாது. தமிழகத்தின் பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்குடன் தான் சிலரால் தூண்டப்பட்டு இந்த நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. எனவே, தந்தை பெரியாரின் சிலைகளை அவமதித்தவர்களை மட்டுமின்றி, அவர்களைத் தூண்டியவர்கள் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தண்டனைப் பெற்றுத் தர தமிழக பினாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க சதி... ராமதாஸ் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை