தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்ட மன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடாமல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பயிலரங்க கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதில் சென்னையைப் போல கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் கட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் ஆகியோர் மறைந்ததையடுத்து காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தமது கட்சி போட்டியிடாது என்று தெரிவித்த கமல்ஹாசன், இந்த தேர்தல்களை கவனித்து தமது கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் என்று கூறினார். தனித்து போட்டியிட வேண்டுமென்று தம் கட்சி தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறினார்.
பயிலரங்கு முடிந்த பின்னர், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இளம் தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது, அரசியலிலும் நாட்டின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் மாற்றத்தை கொண்டுவருவதற்காக மாணவ சமுதாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, கட்சியின் செயற்குழு தீர்மானத்தின்படி, சந்திரசேகரன், காந்தி கண்ணதாசன், குருவையா கருப்பையா, ஜான் சாமுவேல், ஜாண்சன் தங்கவேல், ஸ்நேகன், ராஜசேகர் மற்றும் மூத்த வழக்குரைஞர் விஜயன் ஆகியோர் புதிய செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.