நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை இன்று அதிகாலை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசி இருந்தார்.
தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
கொலை செய்தாலும் என்னிடம் சொல்லி விட்டு செய்யுங்கள். காலையில் பல் துலக்குவதற்குள் கொலையை செய்து விடுவோம். எந்த ஜாதிக்காரனும் மூன்று முறை முதல்வர் ஆகவில்லை. எங்கள் தேவர் இனம்தான் மூன்று முறை முதல்வர் பதவியை வகித்தது என தனது ஜாதியை முன்னிறுத்தி அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கருணாஸின் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவதூறாக பேசுவது, மிரட்டுவது, கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்ற, நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து உள்ளனர்.