திமுக ஊழல் கட்சி: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

by Isaivaani, Sep 24, 2018, 10:42 AM IST

திமுகவை ஊழல் கட்சி என்று கூறிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விபத்தில் கிடைத்த பதவியில் அமர்ந்துகொண்டு எதுவும் பேசலாம் என்று கண்ணியமற்ற முறையில் கன்னியாகுமரியில் வாய்க்கு வந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அவர், தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.

தனது சம்பந்திக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒப்பந்தங்களை தனது கைவசம் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையில் இருந்து அள்ளிக்கொடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றி பேசும் தார்மீகத் தகுதியை எப்போதோ இழந்துவிட்டார்.

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த பதவி விரைவில் பறிபோய் விடுமோ? என்ற பயத்தில் மத்திய பா.ஜ.க.விற்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்து விட்டு ஆட்சியில் நீடிக்கும் எடப்பாடி பழனிசாமி என் மீது பாய்ந்திருப்பது, தன்னை நோக்கி அணி வகுத்து வந்து கொண்டிருக்கும், இனியும் வரப்போகும் ஊழல் வழக்குகளில் இருந்து எப்படி தப்பிக்கப்போகிறோம் என்ற அச்சத்தின் விளைவே என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

‘உட்கட்சி ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்கும் அ.தி.மு.க.வின் ஒரு பிரிவை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வின் உட்கட்சி ஜனநாயகம் பற்றி சிறிதும் கூச்சமோ, வெட்கமோ இல்லாமல் பேசியிருப்பது அரசு விழா என்கிற தரத்தை சாக்கடையில் இறக்கியிருப்பதற்குச் சமமாகும்.
தி.மு.க. தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட என்னைப் பார்த்து, எடப்பாடி பழனிசாமி கூக்குரலிடுவது பொறாமையே தவிர, பொறுப்புள்ள பொருத்தமான பேச்சு அல்ல.

ஊழலுக்காக சிறை சென்ற முதல்-அமைச்சரைப் பெற்ற கட்சி அ.தி.மு.க. ஊழலுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட பொதுச் செயலாளரைக் கொண்டிருந்த கட்சியும் அ.தி.மு.க. தான். தனது சம்பந்திக்கு மட்டுமல்லாமல் தனது அமைச்சரவை சகாக்கள், அவர்களது சகோதரர்கள், உறவினர்களுக்கும் ஒப்பந்தங்களைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்வதைப் பார்த்து ரசிக்கும் ஒரே முதல்-அமைச்சர் இந்தியாவிலேயே தேடித் தேடி கண்டுபிடித்தால் அது எடப்பாடி பழனிசாமிதான்.

அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு தான் உள்ளது. அப்படிப்பட்டவர் என்னைப் பார்த்தும், தி.மு.க.வைப் பார்த்தும் ஊழல் என்று கடைந்தெடுத்த பொய்யுரை நிகழ்த்துவது அரசு கஜானாவில் அடிக்கும் கொள்ளைப் பணத்தின் தழும்பேறிய ஆணவமே தவிர வேறு ஏதுமில்லை.

மாநில மக்களின் நலனுக்காக நேர்மையான ஆட்சியை வழங்குவதிலோ, திறமையான நிர்வாகத்தை அளிப்பதிலோ, கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டி அதைப் போற்றிப் பாதுகாப்பதிலோ திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியையோ, எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கும் அ.தி.மு.க.வின் பிளவுபட்ட பிரிவால் ஏணி வைத்து கூட எட்டிப் பார்க்க முடியாது என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அணி வகுத்து வரும் ஊழல் வழக்குகளே அவருக்கு அதை விரைவில் எளிதில் புரிய வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கு இல்லை.

அ.தி.மு.க.விற்குள் ஒரு பிரிவை கைப்பற்றி கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்து மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றியோ, உள்கட்சி ஜனநாயகம் பற்றியோ உரக்கப் பேசாமல் இருப்பது அவருக்கும், அவரது பிரிவுக்கும், நாட்டிற்கும் நல்லது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading திமுக ஊழல் கட்சி: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை